Published : 21 Jul 2021 03:14 AM
Last Updated : 21 Jul 2021 03:14 AM
உ.பி. தலைநகர் லக்னோவில் 45 தனியார் மருத்துவமனைகளில் நேற்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது குளிர்சாதனப் பெட்டிகளில் பீர் பாட்டில்கள் இருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
உ.பி. தலைநகர் லக்னோவில் கரோனா தொற்றின் 2 அலைகளிலும் பரவல் அதிகமாக இருந்தது.இதனால் அங்கு தனியார் மருத்துவமனைகளிலும் பல ஆயிரம் பேர் சிகிச்சை பெற்றனர். இதில்பெரும்பாலான மருத்துவமனைகள் பல மடங்கு கட்டணம் வசூலித்துள்ளன. இது தொடர்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசுக்கு புகார்கள் குவிந்தன.
தற்போது கரோனா பரவல் குறைந்துள்ள நிலையில், லக்னோவின் 45 தனியார் மருத்துவமனைகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
லக்னோ மாவட்ட ஆட்சியர் அபிஷேக் பாண்டே உத்தரவின் பேரில் துணை ஆட்சியர்களின் பலகுழுக்கள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தின. இதில் அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசு உரிமம் இல்லாமலும் அல்லது அரசு உரிமம் புதுப்பிக்கப்படாமலும் பெரும்பாலான மருத்துவமனைகள் இயங்கி வந்துள்ளன. பலவற்றில் நிரந்தர மருத்துவர்கள் இல்லை. தற்காலிக மருத்துவர்களே பணியாற்றி வந்துள்ளனர். ‘நியூ ஏசியன் ஹாஸ்பிட்டல் அண்ட் ட்ராமா சென்டர்’ என்ற மருத்துவமனையில் பி.எஸ்சி. மட்டுமே பயின்ற அதன் உரிமையாளர் பிரேம்குமார் வர்மா, நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.
செவிலியர் பணியில் அதன் பயிற்சிப்பள்ளி மாணவர்கள் பயிற்சி பெறும் பொருட்டு பணி செய்து வந்துள்ளனர். சோதனை நடந்த மருத்துவமனைகள் சிலவற்றில் குளிர்சாதனப் பெட்டிகளில் மருந்துகளுக்கு பதிலாக பீர் பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்தன. மூன்று மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை மற்றும் அதிநவீன சிகிச்சை பிரிவில் எக்ஸ்ரே உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை.
மருத்துவமனைகளில் இருந்த பல மருந்துக் கடைகளிலும் உரிமம்இல்லை. உரிமம் பெற்ற மருந்துக் கடைகளில் மருந்தக படிப்பு படித்தவர்கள் எவரும் இல்லை. அரசால் அனுமதிக்கப்பட்டதை விட அதிக படுக்கைகள் மருத்துவமனைகளில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின் வீடு திரும்பும் நோயாளிகளின் மருத்துவ அறிக்கைகள் எதுவும் பல மருத்துவமனைகளில் பதிவாகவில்லை.
இதனால், பல மருத்துவமனைகளை உடனடியாக மூடுமாறுலக்னோ மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி உத்தரவிட்டுள்ளார். மேலும், பல மருத்துவமனைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT