Published : 20 Jul 2021 03:08 PM
Last Updated : 20 Jul 2021 03:08 PM
பெகாசஸ் ஒட்டுக் கேட்பு தொடர்பாக ஒவ்வொரு மாநிலத்திலும் நாளை பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்துள்ளது.
வரும் 22-ம் தேதி மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஆளுநர் மாளிகை முன், அடையாளப் போராட்டமும் நடத்தப்படும் என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
பிரான்ஸைச் சேர்ந்த லாப நோக்கமற்ற அமைப்பான ஃபர்மிடன் ஸ்டோரிஸ் மற்றும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆகியவை இணைந்து புலனாய்வு செய்து ஒட்டுக் கேட்பைக் கண்டுபிடித்துள்ளனர். இதில் இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. சர்வதேச அளவில் தி நியூயார்க் டைம்ஸ், கார்டியன், லீ மாண்டே ஆகிய நாளேடுகள் வெளியிட்டுள்ளன.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஜல்சக்தி அமைச்சர் பிரஹலாத் சிங் படேல், முன்னாள் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா, மருத்துவ வல்லுநர் ககன்தீப் காங், ஹரி மேனன், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் மீது பாலியல் புகார் அளித்த பெண், அவரின் உறவினர்களும் ஒட்டுக் கேட்புப் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்றும் இன்றும் இந்த விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின்பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
''பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாகவும், எந்தெந்த தலைவர்களைக் குறிவைத்து ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளது தொடர்பாகவும் காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை ஒவ்வொரு மாநிலத்திலும் பத்திரிகையாளர் சந்திப்பு கூட்டம் நடத்தப்படும்
பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரத்தை உச்ச நீதிமன்றம் மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி வரும் 22-ம் தேதி ஒவ்வொரு மாநிலத்தின் ஆளுநர் மாளிகை முன்பும், காங்கிரஸ் கட்சி சார்பில் அடையாளப் போராட்டம் நடத்தப்படும்.
பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் சமீபத்திய தகவலின்படி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் செல்போன், அவரின் அலுவலக ஊழியர்கள் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளன. கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடந்தபோது, இந்த பெகாசஸ் ஒட்டுக் கேட்பு மென்பொருள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேலின் என்எஸ்ஓ சார்பில் தயாரிக்கப்படும் பெகாசஸ் உளவு மென்பொருள், ஒரு நாட்டின் அரசாங்கத்துக்கு மட்டுமே விற்பனை செய்யப்படும், தனியாருக்கு விற்கப்படாது. ஆதலால், மத்தியில் ஆளும் பாஜக அரசும், அதன் விசாரணை அமைப்புகளும் இந்த பெகாசஸ் மென்பொருளை வாங்கி எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், சமூக செயற்பாட்டாளர்களைக் கண்காணிக்க பயன்படுத்தியிருக்கலாம்.
ஆதலால், பெகாசஸ் ஒட்டுக் கேட்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் கண்காணிப்பில் விசாரணை நடத்தக் கோரியும், உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலகக் கோரியும் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும்''.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT