Published : 20 Jul 2021 12:21 PM
Last Updated : 20 Jul 2021 12:21 PM
நாளை கொண்டாடப்படும் பக்ரீத் பண்டிகையில் விலங்குகளை பலி கொடுப்பதை நிறுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதை முஸ்லிம்களிடம் அகில இந்திய சாதுக்கள் சபையின் தலைவரான மஹந்த் நரேந்தர கிரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலக முழுவதிலும் முஸ்லிம்கள் குர்பானி எனும் பலி கொடுக்கும் பண்டிகையாக பக்ரீத்தை கொண்டாடுகின்றனர். இந்தியாவிலும் நாளை கொண்டாடப்பட உள்ள இந்த ’ஈத் உல் அஸா’ எனும் பக்ரீத் பண்டிகையில் ஆடு, ஒட்டகம் ஆகியவை பலி கொடுக்கப்படுகின்றன.
எருமை மற்றும் மாடுகள் அனுமதிக்கப்பட்ட மாநிலங்களில் மட்டும் பலி கொடுக்கப்படுகின்றன. இச்சூழலில் பக்ரீத் பெயரில் லட்சக்கணக்கான விலங்குகள் பலி கொடுப்பது நிறுத்தப்பட வேண்டும் என உத்தரப்பிரதேசத்திலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து உ.பி.யின் அலகாபாத் நகரிலுள்ள அகில இந்திய சாதுக்கள் சபையின் தலைவரான மஹந்த் நரேந்தர கிரி கூறியதாவது:
எந்த மதமும் உயிர்களை கொல்வதை அனுமதிப்பதில்லை. இதற்கு மாறாக அனைத்து மதங்களும் மற்ற உயிர்களை காக்கவே வலியுறுத்துகின்றன.முஸ்லிம் மவுலானாக்கள் தம் சக இஸ்லாமியர்கள் விலங்குகளை பலி கொடுப்பதை நிறுத்தச் செய்ய வேண்டும்.இதன்மூலம், நாட்டின் சூழல் நல்லதாக மாறி விடும். கடந்த சில வருடங்கள் வரை இந்துக்கள் இடையேயும் விலங்குகளை பலி அளிக்கும் வழக்கம் இருந்தது.
நாட்டின் பல்வேறு பகுதிகளின் புனிதத்தலங்களில் விலங்குகளை பலி கொடுக்கும் வழக்கம் இந்துக்களிடம் நிலவியது.
இந்த பலிகள், தம் மதத்தலைவர்கள் தலையீட்டினால் இந்துக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிறுத்தப்பட்டு விட்டன. இதன்மூலம், பலி கொடுப்பதற்கு பதிலாக தேங்காய்கள் உடைக்கப்படுகின்றன.
இதேபோன்ற வலியுறுத்தல் முஸ்லிம்கள் இடையேயும் அவர்களது மவுலானாக்கள் பேசி புரிய வைத்து பலி கொடுப்பது நிறுத்தப்பட வேண்டும். கரோனா பரவலினால் உ.பி. அரசால் காவடி யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளதையும் நாம் வரவேற்கிறோம்.’ எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT