Published : 19 Jul 2021 11:07 PM
Last Updated : 19 Jul 2021 11:07 PM
45 நாடுகள் பெகாசஸ் உளவு மென்பொருளை பயன்படுத்தும்போது இந்தியாவை மட்டும் குறிவைப்பதன் பின்னணி என்ன என்று முன்னாள் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார்.
இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்தின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் 40 பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட 300 பேரின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக செய்தி வெளியானது.
இதுதொடர்பாக 'தி வயர்' இணையதளம் செய்தி வெளியிட்டு இருந்தது. ஃபர்மிடன் ஸ்டோரிஸ், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆகியவை இணைந்து புலனாய்வு செய்து ஒட்டு கேட்பைக் கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனம் மிகத் தெளிவாக ஒரு விஷயத்தை சொல்லியிருக்கிறது. அதாவது தங்களின் வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் மேற்கத்திய நாடுகள் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. அந்தவகையில் 40 நாடுகள் பெகாசஸ் உளவு மென்பொருளை பயன்படுத்தும்போது இந்தியாவை மட்டும் குறிவைப்பதன் பின்னணி என்ன? இந்தக் கட்டுக்கதையின் திருப்புமுனை என்ன?
சிலரின் பெயர்கள் வேண்டுமென்றே இவ்விவகாரத்தில் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. (ராகுலின் பெயரைக் குறிப்பிடாமல் சொன்னார்). நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக இதனை சொல்ல வேண்டிய அவசியம் என்ன?
இதில் அம்னெஸ்டி போன்ற அமைப்புகள் 'ஆன்ட்டி இந்தியன்' கொள்கையுடன் செயல்பட்டிருக்கவும் வாய்ப்புள்ளதல்லவா?
இதுவரை பாஜக மீது குற்றம் சொல்பவர்கள் யாரும் எங்களுக்கு எதிராக ஒரு ஆதாரத்தைக் கூட கொடுக்கவில்லை.
அரசாங்கம் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறது. அதில், தனிநபர் உரிமையும் அடங்கும். ஏற்கெனவே 2019ல் வாட்ஸ் அப் நிறுவனமானது, பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் தனது பயனாளர்களின் விவரங்கள் திருடப்படுவதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆகையால், இப்போது எழுந்துள்ள ஒட்டுக்கேட்பு புகார் முழுக்க முழுக்க அரசாங்கத்தின் மீது களங்கம் கற்பிக்கும் முயற்சியே" இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT