Published : 19 Jul 2021 03:08 PM
Last Updated : 19 Jul 2021 03:08 PM
பஞ்சாபில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியில் அமருவதற்கு ஏற்ப பணியாற்ற வேண்டும் என புதிய தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சி பூசல் கடந்த ஒரு மாதமாக நீடித்து வந்தது. முதல்வர் அமரிந்தர் சிங்கிற்கு எதிராக மூத்த தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தொடர்ந்து போர்க்கொடி உயர்த்தி வந்தார். வெளிப்படையாகவே முதல்வர் அமரிந்தர்சிங்கை கடுமையாக விமர்சித்து வந்தார்.
பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில் காங்கிரஸில் ஏற்பட்ட உட்கட்சி பூசல் கட்சியை மேலும் பலவீனமாக்கியது.
பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கு ஆதரவாக எம்.பி.க்கள், எம்எல்ஏக்களும், சித்துவுக்கு ஆதரவாகச் சில காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்களும் என இரு பிரிவாகச் செயல்பட்டனர்.
இந்தப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் கட்சி மேலிடம் தலையிட்டது. இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, முதல்வர் அமரிந்தர் சிங்கும், நவ்ஜோத் சிங் சித்துவும் தனித்தனியாகச் சந்தித்துப் பேசினர்.
உட்கட்சிபூசலை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமிக்கப்பட்டார்.
அவருடன் சங்கத் சிங் கில்சியான், சுக்வீந்தர் சிங் டேனி, பவன் கோயல், குல்ஜித் சிங் நக்ரா ஆகியோர் மாநில காங்கிரஸ் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பாட்டியாலா உட்பட பல்வேறு குருத்தவாராக்களிலும் சித்து இன்று வழிபாடு நடத்தினார். முன்னதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்த வேண்டும் என்ற எனது கனவை செயல்படுத்த வாய்ப்பு கிடைத்துள்ளது. வாய்ப்பளித்த கட்சித் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை தந்துள்ளனர். எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது செயல் திறனை நிருபிப்பேன். இன்று பயணம் தற்போது தான் தொடங்கியுள்ளது. பஞ்சாபில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியில் அமருவதற்கு ஏற்ப பணியாற்ற வேண்டும் எனக் கூறி கட்சித் தலைமை 18 அம்சங்கள் அடங்கிய திட்டமிடலை வழங்கியுள்ளது. அதன்படியே செயல்படுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT