Published : 19 Jul 2021 01:44 PM
Last Updated : 19 Jul 2021 01:44 PM
பசு சாணம், கோமியம் கரோனா வைரஸைக் குணப்படுத்தும் என்று பேசிய பாஜக தலைவர்களை விமர்சித்தற்காக தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட மணிப்பூர் அரசியல் செயற்பாட்டாளரை மாலை 5 மணிக்குள் விடுவிக்க வேண்டும். இரவுகூடசிறையில் இருக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மணிப்பூரைச் சேர்ந்த அரசியல், சமூகச் செயற்பாட்டாளர் லீச்சோம்பாம் எரன்ட்ரோ. மணிப்பூர் பாஜக தலைவர் கரோனா பாதிப்பால் உயிரிழந்தார். இதையடுத்து, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எரன்ட்ரோ பதிவிட்ட கருத்தில், “ கரோனா வைரஸைப் பசுவின் சாணம், கோமியம் குணப்படுத்தாது. அறிவியல், மருத்துவத்துக்குப் புறம்பான வழிகளை மக்களுக்குக் கற்பிக்கக்கூடாது” எனத் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, பாஜக தலைவர்கள் அளித்த புகாரையடுத்து, மணிப்பூர் போலீஸார் லீச்சோம்பாம் எரன்ட்ரோவை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கடந்த மே 13-ம் தேதி கைது செய்து, 17-ம் தேதிவரை காவலில் வைத்தனர்.
தன் மீது தொடரப்பட்ட தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரியும், ஜாமீன் கோரியும் இம்பால் நீதிமன்றத்தில் எரன்ட்ரோ சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இம்பால் மாவட்ட நீதிமன்றம், எரன்ட்ரோவுக்கு ஜாமீன் வழங்கியபோதிலும், அவரை போலீஸார் விடுவிக்காமல் இருந்தனர்.
இதையடுத்து, எரன்ட்ரோவின் தந்தை எல்.ரகுமணி சிங், உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சாதன் பராசத் மூலம் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், “பாஜக தலைவர்கள் கரோனாவைக் குணப்படுத்த பசுவின் சாணம், கோமியத்தைப் பரிந்துரைத்தால் எனது மகன் எரன்ட்ரோ அதுகுறித்து விமர்சித்தார்.
ஆனால், அவர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து தண்டிக்க வேண்டும் என்ற நோக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். சில நாட்களில் காவலில் வைக்கப்பட்ட நிலையில், எரன்ட்ரோவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது, ஆனால், ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், அவரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் 30-ம் தேதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக எனது மகன் கைது செய்யப்பட்டுள்ளார். இது உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் அவமதிப்பு செய்ததாகும். மக்கள் சமூக வலைதளங்களில் பொய்யான குறைபாடுகளைக் கூறினாலும், அல்லது விமர்சித்தாலும் போலீஸாரும், மத்திய அரசும், மாநில அரசுகளும அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடாது என எச்சரித்திருந்தது. ஆனால், சமூக வலைதளத்தில் தகவல் பதிவிட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். மனுதாரர் கைதுசெய்யப்பட்டு இருப்பது முற்றிலும் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு மாறானது” எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எம்.ஆர்.ஷா ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “மனுதாரர் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருப்பது அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 21 வழங்கிய உரிமைகளுக்கு எதிரானது. மனுதாரரை இன்று மாலைக்குள் விடுவிக்க வேண்டும், இரவுகூட சிறையில் இருக்க அனுமதிக்க முடியாது. இந்த உத்தரவை உடனடியாக மணிப்பூர் சிறை அதிகாரிகளுக்குத் தெரிவிதித்து அவரை விடுவிக்க வேண்டும். இந்த வழக்கில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நாளை பதில் அளிக்க வேண்டும். நாளை மீண்டும் விசாரிக்கிறோம்” என உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT