Published : 19 Jul 2021 12:28 PM
Last Updated : 19 Jul 2021 12:28 PM
வேளாண் சட்டங்களை நீக்கக் கோரி விவசாயிகள் நடத்திவரும் போராட்டம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, பணவீக்கம் ஆகியவை குறித்து விவாதிக்க வேண்டும் என்பதால், அலுவல்களை ஒத்திவைக்கக் கோரி மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சி சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கி, ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் மத்திய அரசுக்கு நெருக்கடி அளிக்க எதிர்க்கட்சிகள் பல்வேறு விவகாரங்களையும், மக்களை பாதிக்கும் விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, விவசாயிகள் பிரச்சினை, கரோனா தடுப்பூசி ஆகியவற்றை எழுப்ப முடிவு செய்துள்ளன.
இதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டம் நேற்று முடிந்ததும், எதிர்க்கட்சிகள் சார்பில் ஒரு கூட்டம் கூட்டப்பட்டு இது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில், 40 பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள், நீதிபதி உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டவர்களின் செல்போன் எண்களை இஸ்ரேல் நிறுவனம் மூலம் உளவு பார்க்கப்பட்ட செய்தி நாடாளுமன்றத்தில் பெரும் புயலைக் கிளப்பும் எனத் தெரிகிறது.
இதற்கிடையே, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நிருபர்களுக்கு இன்று அளித்த பேட்டியில் கூறுகையில், “விவசாயிகள் பிரச்சினை, பணவீக்கம் ஆகியவற்றைப் பற்றி விவாதிக்க நோட்டீஸ் அளித்துள்ளோம். அலுவல் ஆலோசனைக் குழு எதற்கு அனுமதி தரப்போகிறது எனப் பார்க்கலாம். இந்த விவகாரத்தைத் தொடர்ந்து எழுப்புவோம்.
பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக சித்து நியமிக்கப்பட்டது காங்கிரஸ் மேலிடம் எடுத்த முடிவு. இளம் அரசியல் தலைவர், நிச்சயம் சிறப்பாகச் செயல்படுவார்” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே காங்கிரஸ் எம்.பி., கே.சி.வேணுகோபால் விதி எண் 267-ன் கீழ் மாநிலங்களவை அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, அதற்கான தீர்வு குறித்து விவாதிக்கக் கோரி நோட்டீஸ் அளித்துள்ளார்.
மேலும் மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி. இளமாறன் கரீம், வி.சிவதாசன் ஆகியோரும் நோட்டீஸ் அளித்து, விவசாயிகள் பிரச்சினை குறித்து விவாதிக்கக் கோரியுள்ளனர். திமுக சார்பில் எம்.பி. திருச்சி சிவா, மேகதாது அணை தொடர்பாக விவாதிக்க வேண்டும் எனக் கோரி நோட்டீஸ் அளித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT