Published : 18 Jul 2021 05:16 PM
Last Updated : 18 Jul 2021 05:16 PM
உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணி்க்கு காங்கிரஸ் கட்சி தயாராக இருக்கிறது என்று மாநிலத்தின் பொறுப்பாளரும், பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் 2022ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ் கட்சி இரு ஆண்டுகளுக்கு முன்பே பிரியங்கா காந்தியை களத்தில் இறக்கிவிட்டுள்ளது. தற்போது காங்கிரஸ் கட்சிக்கு 5 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர்.
ஆனால், மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்க பாஜக தீவிரமாக காய்களை நகர்த்தி வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜக பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இதனால் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாகச் செயல்படுமா என்ற சந்தேகம் தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதனால் கட்சியின் எதிர்கால நலனுக்காக காங்கிரஸ்கட்சி கூட்டணிக்கு சூசகமாக அழைத்துள்ளது. லக்னோவில் பிரியங்கா காந்தி கட்சியின் நிர்வாகிகளிடம் கூறுகையில் “ ஆகஸ்ட் மாதத்தில் இருந்து உத்தரப் பிரதேசத்தில்தான் இருப்பேன். காங்கிரஸ் கட்சி இதற்கு முன் மாநிலத்தில் தொய்வாக இருந்தது என்பதை ஏற்கிறேன், ஆனால், இப்போது விழித்துக் கொண்டது. கிராமம் தோறும் காங்கிரஸ் கட்சியை விரிவுபடுத்தியுள்ளோம்.
ஒவ்வொரு கிராமத்திலும் 5 முதல் 6 பேர் காங்கிரஸ் கட்சிக்காகப் பணியாற்றுகிறார்கள், இந்தப் பணிகள் தொடர்ந்து நடக்கும். பல்வேறு காரணங்களுக்காக கடந்த காலங்களில் கட்சியிலிருந்து விலகியவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க கட்சி முயன்று வருகிறது.
முன்னாள் எம்.பி., எம்எல்ஏக்கள் மீ்ண்டும் காங்கிரஸில் இணைந்து தேர்தலில் போட்டியிட விரும்பினால், அதை காங்கிரஸ் தலைமை பரிசீலிக்க தயராக இருக்கிறது. அவர்கள் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிக்குச் சென்று களப்பணிகளைக் கவனிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
பிரியங்கா காந்தி பேசியது குறித்து காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறுகையில் “ பிரியங்கா காந்தி மனநிலையில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்துப் போட்டியிடத் தயாராக இருக்கிறது, அதற்கான கதவைத் திறந்துவைக்கிறது.
எந்தக் கட்சியுடனும் கூட்டணிக்காகப் பேசுவதற்கு தயாராக காங்கிரஸ் இருக்கிறது. இப்போதுள்ள நிலையி்ல் கட்சியை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். கூட்டணிக்கான கதவுள் திறந்துள்ளன. மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், மறுமலர்ச்சி ஏற்படவும் பிரியங்கா காந்தி தீவிரமாக முயன்றுவருகிறார்.
மாநிலத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் இடையே நல்ல சூழலை பிரியங்கா காந்தி உருவாக்கியுள்ளார். முதலில் கட்சியை வலுப்படுத்தி, அடுத்ததாக கூட்டணிக்கு பிரியங்கா காந்தி முக்கியத்துவம் அளிப்பார்” எனத் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT