Published : 18 Jul 2021 08:42 AM
Last Updated : 18 Jul 2021 08:42 AM
பஞ்சாப் மாநில காங்கிரஸில் ஒரு மாதமாக நீடித்துவந்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. மாநில காங்கிரஸ் தலைவராக முன்னாள் கிரி்க்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து நியமிக்கப்பட உள்ளார். அவருக்கு துணையாக 4 செயல் தலைவர்களும் நியமிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன
பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சி பூசல் கடந்த ஒரு மாதமாக நீடித்து வருகிறது. முதல்வர் அமரிந்தர் சிங்கிற்கு எதிராக மூத்த தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தொடர்ந்து போர்க்கொடி உயர்த்தி வந்தார். வெளிப்படையாகவே முதல்வர் அமரிந்தர்சிங்கை சித்து கடுமையாக விமர்சித்து வந்தார்.
பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில் காங்கிரஸில் ஏற்பட்ட உட்கட்சி பூசல் கட்சியை மேலும் பலவீனமாக்கியது.
பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கு ஆதரவாக எம்.பி.க்கள், எம்எல்ஏக்களும், சித்துவுக்கு ஆதரவாகச் சில காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்களும் என இரு பிரிவாகச் செயல்பட்டனர்.
இந்நிலையில் இந்தப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் கட்சி மேலிடம் தலையிட்டது. இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, முதல்வர் அமரிந்தர் சிங்கும், நவ்ஜோத் சிங் சித்துவும் தனித்தனியாகச் சந்தித்துப் பேசினர்.
இந்த சந்திப்புக்குப்பின், மாநில காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாகரை அவரின் இல்லத்தில் நேற்று சந்தித்து நவ்ஜோத்சிங் சித்து நீண்ட ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப்பின், மாநிலத்தில் உட்கட்சிபூசலை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமிக்கப்படலாம் என்றும், அவருக்குத் துணையாக 4 செயல்தலைவர்களும் நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து காங்கிரஸ் எம்எல்ஏ பிரகாத் சிங் அளித்த பேட்டியில், “ மாநிலத்தில் கட்சியில் நீடித்துவந்த குழப்பம் முடிவுக்கு வந்துவிட்டது. நல்லவிதமான சூழல் நிலவுகிறது. காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து பொறுப்பேற்க உள்ளார். எனக்கு அவர் நல்லநண்பர். ஆனால், தலைவர் பொறுப்பை ஏற்க உள்ளார் என்பது குறித்து எனக்குத் தெரியாது” எனத் தெரிவித்தார்.
மாநிலக் காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமிக்கப்பட்டாலும், அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது, முதல்வர் வேட்பாளராக அமரிந்தர்சிங் தான் முன்னிறுத்தப்படுவார் எனத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT