Published : 16 Jul 2021 04:44 PM
Last Updated : 16 Jul 2021 04:44 PM

உ.பி. கரோனா; பிரதமர் மோடியின்  நற்சான்றிதழால் யோகி அரசின் கொடூரத்தை மறைக்க முடியாது: பிரியங்கா கடும் சாடல்

புதுடெல்லி

கரோனா 2-வது அலையை யோகி ஆதித்யநாத் அரசு சிறப்பாக கையாண்டதாக பிரதமர் மோடி பாராட்டிய நிலையில் யோகி அரசின் கொடூரம், அலட்சியப்போக்கு, தவறான மேலாண்மை, செயலற்ற நிலை பிரதமரின் நற்சான்றிதழால் மறைந்துவிடாது என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று வாரணாசி சென்று அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் பேசியதாவது:
நாடுமுழுவதும் கரோனா பரவல் குறைந்து வருகிறது. இந்தநேரத்தில் கரோனா பரவலை எதிர்த்து நாடுமுழுவதும் போராடி வருபவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கோவிட் வைரஸை எதிர்த்து, இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசம் வலிமையுடனும் சிறப்புடனும் செயல்பட்டது. வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசு எடுத்த நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. கரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த உ.பி. அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் ஈடு இணையில்லாதது.

கரோனாவை கட்டுப்படுத்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும். இதுவே அரசின் இலக்கு. இதற்காவே அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. நாட்டிலேயே அதிகமான நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது உ.பி.யில் தான்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார். இதனை காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதில் கூறியுள்ளதாவது:

உத்தரப் பிரதேசத்தில் கரோனா பாதிப்பால் மக்கள் பெரிய அளவில் இன்னல்களை சந்தித்தனர். உதவியின்றி தவித்தனர். கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்கள் கங்கை நதிக்கரைகளில் கேட்பாரற்று கிடந்தன.

மோடியும், யோகியும் இதை மறந்திருக்கலாம். ஆனால், பாதிக்கப்பட்ட மக்கள் மறந்துவிடவில்லை.
யோகி அரசின் கொடூரம், அலட்சியப்போக்கு, தவறான மேலாண்மை, செயலற்ற நிலை பிரதமரின் நற்சான்றிதழால் மறைந்துவிடாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x