Published : 16 Jul 2021 10:36 AM
Last Updated : 16 Jul 2021 10:36 AM
ஒரு சில நாடுகளின் மிகையான மீன்பிடிப்பால் இந்திய மீனவர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அந்த நாடுகளுக்கு ஆதரவாக உலக வர்த்தக அமைப்பு செயல்படுவதாகவும் அமைச்சர் பியூஷ் கோயல் கடும் வாதம் செய்தார்.
முக்கியத்துவம் வாய்ந்த மீன்பிடி தொழில் மானிய பேச்சுவார்த்தைகள் பற்றி உலக வர்த்தக அமைப்பின் அமைச்சகங்கள் இடையேயான கூட்டம் நேற்று நடைபெற்றது. உலக வர்த்தக அமைப்பின் தலைமை இயக்குநர் டாக்டர் நிகோசி, இதர உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் தூதர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் வளர்ந்து வரும் நாடுகளின் உரிமைகள் பற்றி மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கடுமையாகப் பேசினார்.
இந்தியா சார்பாக கடுமையான வாதத்தை முன்வைத்த கோயல், இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் இந்தியா தீவிரமாக இருப்பதாகவும், முரணான மானியங்கள் மற்றும் ஒரு சில நாடுகளின் மிகையான மீன்பிடிப்பால் இந்திய மீனவர்களும் அவர்களது வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.
இந்த ஒப்பந்தத்தில் சம அளவு மற்றும் நேர்மை இன்னும் கண்டறியப்படாதது குறித்து அவர் வருத்தம் தெரிவித்தார். பிரதமர் மோடியின் விருப்பமான மீன்வளத் துறையின் ஊக்குவிப்பு மற்றும் சிறிய மீனவர்களின் பாதுகாப்பு குறித்தும் அமைச்சர் வலியுறுத்தினார்.
மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் உருகுவே சுற்றின்போது மேற்கொண்ட தவறுகளால், வேளாண்மை போன்ற துறைகளில் குறிப்பிட்ட வளர்ந்த உறுப்பு நாடுகளுக்கு ஏற்பட்ட பாதிப்பைப் போன்று தற்போதும் நாம் தவறு செய்யக்கூடாது என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.
மீன்வள திறன்களை இன்னும் மேம்படுத்த வேண்டிய இந்தியா உள்ளிட்ட நாடுகளால் தங்களது எதிர்கால லட்சியங்களை தியாகம் செய்ய முடியாது என்று கோயல் தெளிவுப்படுத்தினார். மேன்மை அடைந்த நாடுகளைத் தொடர்ந்து மானியங்கள் வழங்க அனுமதிப்பது நியாயமற்றது என்றும் அவர் கூறினார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பல காலங்களாக இந்திய நடைமுறை வழக்கங்களில் ஊன்றி இருப்பதோடு, இதைப் பற்றி பிரதமர் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகக் குறிப்பிட்ட கோயல், தற்போதைய மற்றும் வருங்கால மீன்பிடி தேவைகளை சமநிலை படுத்துவதற்கும், எதிர்காலத்தில் மீன்பிடி திறன்களில் சமமான வளர்ச்சிக்கான இடத்தை பாதுகாப்பதற்கும், எந்த ஏற்ற தாழ்வுகளும் இல்லாமல் பயனுள்ள சிறப்பு மற்றும் தனிப்பட்ட நடைமுறைகள் வழங்கப்பட்டால் பேச்சுவார்த்தையை நிறைவு செய்ய இந்தியா உறுதி பூண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT