Published : 15 Jul 2021 07:05 PM
Last Updated : 15 Jul 2021 07:05 PM
"பிரதமர் நரேந்திர மோடியால் மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஏற்பட்ட தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை ஆகையால் எங்கள் மாநிலத்தை அரசியல் ரீதியாக பழிவாங்குகிறார்" என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
கொல்கத்தாவில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், "பிரதமர் மோடி இன்று உத்தரப் பிரதேசத்தில் ஆற்றிய உரையில், மாநிலங்களுக்கு தாராளமாக கரோனா தடுப்பூசிகளை வழங்குவதாகக் கூறியுள்ளார். ஆனால், எங்களுக்குக் கிடைக்கவில்லை. இதுவரை வெறும் 2.12 கோடி கரோனா தடுப்பூசி மட்டுமே எங்களுக்குக் கிடைத்துள்ளது. இதில் 18 லட்சம் தடுப்பூசிகள் நாங்கள் வாங்கியது. சில மாநிலங்களுக்கு தடுப்பூசி தொடர்ந்து விநியோகிக்கப்படுகிறது. சில மாநிலங்களுக்கு சீராக வழங்கப்படுவதே இல்லை.
எங்கள் மாநிலத்துக்கான நிதியைக் கொடுக்காவிட்டாலும் எங்களுக்கான தடுப்பூசியைக் கொடுங்கள். மாறாக மத்திய அமைப்புகளைக் கொண்டு அரசியல் ரீதியாக பழிவாங்காதீர்கள்.
மேற்குவங்கத்தில் வன்முறை நிகழ்வதாக பிரதமர் கூறுகிறார். உத்தரப் பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு என்பதே பெயரளவில் கூட இல்லை என்பது பிரதமருக்குத் தெரியும். உன்னாவோ தொடங்கி ஹத்ராஸ் வரை அதனை நிரூபிக்க நிறைய சம்பவங்கள் உள்ளன. ஆனால், மேற்குவங்கத்தின் மீது தொடர்ந்து களங்கம் விளைவிக்கும் வகையில் பேசுகிறார்.
மேற்குவங்கத்தில் தேர்தலுக்குப் பின்னர் கலவரம் நடைபெற்றதாகக் கூறப்படும் விவகாரத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டிய அறிக்கையை பாஜக கசியவிட்டுள்ளது. நீதிமன்றத்தைக் கூட பாஜக மதிப்பதில்லை. மேற்குவங்க மக்களின் மீது பழிபோடுவதே பாஜகவுக்கு வழக்கமாக உள்ளது" என்றார்.
டெல்லி செல்கிறேன்..
தொடர்ந்து பேசிய அவர் தற்போது கரோனா பரவல் குறைந்துள்ளதால் தான் டெல்லிக்கு செல்லவிருப்பதாகக் கூறினார். நான் அங்கு சில அரசியல் கட்சித் தலைவர்களை சந்திக்கவுள்ளேன். அனுமதி கிடைத்தால் குடியரசுத் தலைவரையும் பிரதமரையும் சந்திப்பேன் என்று கூறியுள்ளார்.
மம்தா பானர்ஜி தனது டெல்லி பயணத்தின்போது சோனியாவை மட்டுமல்லாது மற்ற ஒருமித்த கொள்கை கொண்ட கட்சியினரையும் சந்திப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இந்நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கை, எகிறும் விலைவாசி உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக மத்திய அரசு ஒன்றிணைந்து எதிர்ப்பது குறித்து இந்த சந்திப்பின் போது மம்தா சோனியாவுடன் ஆலோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT