Published : 15 Jul 2021 06:30 PM
Last Updated : 15 Jul 2021 06:30 PM
தமிழகத்தில் இந்த ஆண்டு கூடுதலாக 4 நகரங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மத்தியக் கல்வி அமைச்சர், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் இருவரையும் சந்தித்து தமிழகம் சார்பாக உள்ள 13 கோரிக்கைகளை அளித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மா.சுப்பிரமணியன் கூறுகையில் ‘‘நீட் தேர்வு விவகாரத்தில் மாணவ, மாணவிகள் உயிரிழப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைக் குறிப்பிட்டுச் சொன்னோம். அதேபோன்று நீட் தேர்வில் உள்ள பாடப்பிரிவுகளில் மாநில, சிபிஎஸ்இ பாடத்திட்டங்கள் உள்ள நிலை குறித்து எடுத்துச் சொன்னபோது அவரும் இது சம்பந்தமாகப் பரிசீலிப்பதாகச் சொன்னார்.
பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதங்கள், நேரில் சந்தித்தபோது வைத்த கோரிக்கைகள், அளித்த மனு போன்ற விவரங்களைக் கல்வி அமைச்சரிடம் அளித்தோம். அதேபோல் நீதிபதி ஏ.கே.ராஜன் கமிட்டி அறிக்கையையும், அதன் பரிந்துரைகள் பற்றியும் பேசினோம்’’ எனக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது ட்விட்டர் பக்கதில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
‘‘தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று என்னை சந்தித்தார். அப்போது நீட் தேர்வு உட்பட தமிழக பிரச்னைகள் குறித்து விவாதித்தோம். நீட் தேர்வு குறித்து உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளின் பின்னணி குறித்து அவருக்கு விளக்கினோம்.
மாணவர்களின் வசதியாக தமிழகத்தில் 4 நகரங்களில் கூடுதலாக நீட் தேர்வு மையங்கள் இந்த ஆண்டு அமைக்கப்படும். செங்கல்பட்டு, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர் ஆகிய இடங்களில் 4 கூடுதல் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் தெரிவித்திருக்கிறேன். நீட் தேர்வு எழுதும் மொழிகள் 11 லிருந்து 13 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழ் மொழியில் ஏற்கெனவே நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. பஞ்சாபி, மலையாளம் மொழிகளிலும் தற்போது தேர்வு நடைபெறும். தேர்வு எழுதும் மையங்களில் எண்ணிக்கையும் அதிகரிக்கும். தேர்வு நடைபெறும் நகரங்களின் எண்ணிக்கை 14 லிருந்து 18 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT