Published : 15 Jul 2021 01:53 PM
Last Updated : 15 Jul 2021 01:53 PM
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் விடுதலை போராட்ட வீரர்களை ஒடுக்க கொண்டு வரப்பட்ட தேசத் துரோகச் சட்டம் நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகும் தேவையா என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அடிப்படை உரிமைகளில் ஒன்றான கருத்துச் சுதந்திரத்துக்குக் காரணமின்றிக் கட்டுப்பாடு விதிக்கும் தேச துரோக சட்டம் செல்லுபடியாகுமா என்பது குறித்து முன்னாள் ராணுவ அதிகாரி ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் ஜெனரல் எஸ்.ஜி. வாம்பாத்கரே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஐபிசி சட்டத்தில் 124-ஏ பிரிவு என்பது தேசத்துரோகச் சட்டத்தைக் குறிக்கிறது. ஆனால், இந்தச் சட்டம் முற்றிலும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. அரசாங்கத்தின் மீதான அதிருப்தி என்ற வகையில் சட்டத்துக்குத் தெளிவற்ற வகையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 19 (சி) வழங்கியுள்ள பேச்சுரிமை, கருத்துரிமை ஆகியவற்றுக்குத் தேவையற்ற வகையில் கட்டுப்பாடு விதிக்கிறது. அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமைகளை அனுமதிக்காமல் சட்டம் மறுக்கிறது.
1962-ம் ஆண்டு கேதார்நாத் வழக்கில் வழங்கப்பட்டதீர்ப்பு என்பது ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் கொண்டுவரப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டது. அப்போது அடிப்படை உரிமைகள் குறித்து கவனத்தில் கொள்ளப்படவில்லை. எனவே இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் ஏ.எஸ்.போபன்னா, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் தலைமையிலான அமர்வு முன்பு இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இந்த சட்டம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அவர்கள் கூறியதாவது:
தேச துரோக வழக்கு என்பது மரத்தை வெட்டும் கோடாரி போன்றது. இதனை தவறாக பயன்படுத்தினால் மொத்த காட்டையும் அழித்து விட முடியும். பல்வேறு விசாரணை அமைப்புகளால் தேச துரோகச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படும் தகவல் மிகுந்த வேதனை அளிக்கிறது.
இதுபோன்ற சட்டம் அரசுக்கு எதிராக குரல் கொடுக்கும் கட்சிகள், அமைப்புகள், தனிநபர்களுக்கு எதிராக தவறாக பயன்படுத்தப்படுகிறது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் விடுதலை போராட்ட வீரர்களை ஒடுக்க கொண்டு வரப்பட்ட தேசத் துரோகச் சட்டப்பிரிவு தற்போது தேவையா. நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் தேசத்துரோக சட்டத்தை கடைப்பிடிப்பது ஏன். இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT