Published : 14 Jul 2021 03:55 PM
Last Updated : 14 Jul 2021 03:55 PM

இந்திய தண்டனை சட்டத்தில் வருகிறது பெரிய அளவில் மாற்றம்: அமித் ஷா தகவல்

காந்திநகர்

இந்திய தண்டனை சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறை சட்டங்களில் பெரிய அளவில் மாற்றங்களை கொண்டு வருவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

குஜராத் மாநிலம் காந்தி நகரில் அமைந்துள்ள தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:
பொதுவாக நாடுமுழுவதும் காவல்துறை மீது இரண்டு குறைகள் கூறப்படுகின்றன. எந்த நடவடிக்கையும் எடுப்ப இல்லை அல்லது வரம்பு மீறி காவல்துறையினர் செயல்படுகின்றனர் என்ற புகார் வருகிறது.

காவல்துறையினர் நடுநிலையோடும், நியாயமாகவும் செயல்பட குற்ற விசாரணையில் சரியான சாட்சிகள் கிடைக்க வேண்டும். அறிவியல்பூர்வமாக இதை நாம் அணுக வேண்டும். அந்தக் காலத்தில் கூறுவதுபோல மூன்றாம் தரமான சித்ரவதை செய்து குற்றத்தை ஒப்புக் கொள்ள செய்வது, மிரட்டி சாட்சிகளை தயார் செய்வது போன்றவை பயன் தராது.

புதிய மாறுபட்ட சூழல் மற்றும் நவீன வளர்ச்சிக்கு ஏற்ப விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். இதற்கு தடய அறிவியல் விசாரணை அதிகமாக கைகொடுக்கும்.

குறிப்பிட்ட காலங்களுக்கு மேல் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ள குற்றங்களில் தடய அறிவியல் விசாரணையை கட்டாயமாக்க வேண்டும். அதற்கு தேவையான பயிற்சி பெற்றவர்கள் அதிகளவில் தேவை. அறிவியல் பூர்வமான விசாரணையின் வாயிலாக எந்த குற்றத்திலும் சரியான, நியாயமான சாட்சிகள் ஆதாரங்கள் கிடைக்கும்.

ஐபிசி எனப்படும் இந்திய தண்டனை சட்டம், சிஆர்பிசி எனப்படும் குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம் ஆகியவற்றில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசு தீவிரமான ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x