Published : 14 Jul 2021 01:26 PM
Last Updated : 14 Jul 2021 01:26 PM

பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணைய முடிவு?

புதுடெல்லி

ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை சந்தித்து பேசியதை தொடர்ந்து தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் தமிழகம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்கள் முக்கியத்துவம் பெற்றன. இங்கு திமுக மற்றும் திரிணமூல் காங்கிரஸுக்காக பிரஷாந்த் கிஷோர் பிரச்சார வியூகம் அமைத்தார்.

தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் அரசியல் வியூகப் பணியில் இருந்து விலகப் போவதாகவும், இனிமேல் குடும்பத்தினருடன் காலத்தைச் செலவிடவுள்ளேன், ஐபேக் நிறுவனத்தை அதில் உள்ள மற்ற நண்பர்கள் நடத்துவார்கள் என்று பிரசாந்த கிஷோர் தெரிவித்திருந்தார்.

பின்னர் பிரசாந்த் கிஷோர் மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை இரண்டு முறை சந்தித்துப் பேசினார். மிஷன் 2024 எனப்படும் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலையொட்டிய திட்டமிடல் என தகவல் வெளியானது.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்த்து வலிமையுடன் போராட எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றிப்பது பற்றியும் எதிர்க்கட்சிகளின் சார்பில் பிரதமர் வேட்பாளர் குறித்து இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகின.

இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை பிரசாந்த் கிஷோர் நேற்று திடீரென சந்தித்தார். டெல்லியில் நடந்த இந்த சந்திப்பின்போது பிரியங்கா காந்தியும் உடன் இருந்தார். காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபாலும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டார்.

அடுத்த ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இது அடுத்து வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலின் முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது. அதுபோலவே பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெறுகிறது.

அங்கு ஆளும் காங்கிரஸ் சார்பில் முதல்வராக இருக்கும் அம்ரீந்தர் சிங்குக்கு தேர்தல் பணியாற்ற பிரசாந்த் கிஷோர் ஏற்கெனவே ஒப்புக் கொண்டார். இதனால் இரு மாநில தேர்தல் தொடர்பாக விவாதித்து இருக்கலாம் என தகவல் வெளியானது.

இதனிடையே பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு மாநில தேர்தல் விவகாரம் மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியை வலிமையாக்கவும், 2024-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு அக்கட்சியை பாஜகவுக்கு எதிராக வலிமை கொண்ட எதிர்க்கட்சியாக மாற்றவும் பிரசாந்த் கிஷோர் விரும்புவதாகவும் கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்து உறுதியான அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.

ஏற்கெனவே ஐக்கிய ஜனதாதளக் கட்சியில் சேர்ந்த பிரசாந்த் கிஷோர் பின்னர் அக்கட்சியில் இருந்து வெளியேறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x