Published : 14 Jul 2021 09:50 AM
Last Updated : 14 Jul 2021 09:50 AM
கரோனா வைரஸ் 3-வது அலை குறித்து பலமுறை எச்சரித்து வருகிறோம். நாங்கள் வானிலை அறிக்கை வாசிக்கிறோம் என்கிற ரீதியில் மக்கள் நினைக்க வேண்டாம் என்று மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் பரவல் 2-வது அலை நாட்டில் மெல்ல மெல்லக் குறையத் தொடங்கியுள்ளது ஆனால், முடிவுக்கு வரவில்லை. பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளதால், மக்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனர்.
கரோனாவிலிருந்து காக்கும் தடுப்பூசியை மக்களில் 36 சதவீதம் பேர் மட்டும் செலுத்தியுள்ளதால், கரோனா 3-வது அலை நிச்சயம் வரக்கூடும் எனப் பல்வேறு மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். கரோனா மூன்றாவது அலையை வராமல் தடுக்கவும், தள்ளிப்போடவும், மக்கள் முறையாக முகக்கவசத்தை அணிவது, சமூக விலகலைக் கடைப்பிடிப்பது, கைகளைக் கழுவுவது, தடுப்பூசி செலுத்துதல் போன்றவை மூலம் தள்ளிப்போடலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஆனால், பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட நிலையில் மக்கள் சமூக விலகலை மதிக்காமலும், கடைப்பிடிக்காமலும் கூட்டமாகச் செல்லுதல், முகக்கவசம் சரியாக அணியாமல் இருத்தல் போன்ற விதிமுறைகளை மீறுகிறார்கள். இதனால் கரோனா 3-வது அலை உருவாகும் சூழலுக்கு வழிவகுக்கிறார்கள்.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் நேற்று பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''கரோனா வைரஸுக்கு எதிராக நாம் இதுவரை பெற்ற நற்பலன்களை எல்லாம், மக்கள் கரோனா தடுப்பு விதிகளைக் கடைப்பிடிக்காமல் இருந்தால் அவை வீணாகிவிடும். கரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றாமல் இருந்து, விதிகளை மீறினால் அதுவே கரோனா 3-வது அலைக்குக் காரணமாகவிடும்.
ஆதலால், ஒவ்வொருவரிடமும் நான் விடுக்கும் வேண்டுகோள், நாங்கள் கரோனா 3-வது அலை குறித்து எச்சரிக்கை விடுக்கும்போது, அதை மக்கள் வானிலை அறிக்கை படிக்கிறோம் என நினைக்க வேண்டாம். தயவுசெய்து கரோனா 3-வது அலை குறித்த விபரீதங்களை, ஆபத்தைப் புரிந்து கொள்ளுங்கள், நமக்குப் பொறுப்பு இருக்கிறது.
பல்வேறு சுற்றுலாத் தளங்களில் மக்கள் விதிமுறைகளை மீறுகிறார்கள். கடந்த 2 ஆண்டுகளாக சிறையில் அடைபட்டுக் கிடந்தோம். இப்போது சுதந்திரம் பெற்றுவிட்டோம் என்ற ரீதியில் மக்கள் வெளியே சுற்றுகிறார்கள். கரோனா பற்றிக் கவலைப்படாமல் கூட்டம் கூட்டமாகச் செல்கிறார்கள்.
கரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் 11 மாநிலங்களுக்கு மத்திய குழு சென்றுள்ளது. வடகிழக்கு மாநிலங்கள் தவிர்த்து மகாராஷ்டிா, சத்தீஸ்கர், கேரளா, ஒடிசாவுக்கும் குழு அனுப்பப்பட்டு கரோனா பரவல் ஆய்வு செய்யப்பட உள்ளது''.
இவ்வாறு லாவ் அகர்வால் தெரிவித்தார்.
இதற்கிடையே சமீபத்தில் கரோனா விதிகளை மதிக்காமல் மக்கள் கூட்டமாக இருந்த புகைப்படங்களையும் மத்திய அரசு வெளியிட்டது. அதில் டெல்லி சாதர் பஜார், ஜன்பத் மார்க்கெட், மகாராஷ்டிராவின் பூஷி அணை, சண்டிகரின் சுக்னா ஏரிப் பகுதி, சென்னையில் தி.நகர் ரங்கநாதன் தெரு, மதுரை மாவட்டத்தில் உள்ள வெள்ளரிப்பட்டி கிராமத்தில் நடந்த மீன்பிடித் திருவிழா ஆகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT