Published : 13 Jul 2021 04:07 PM
Last Updated : 13 Jul 2021 04:07 PM
ரஷ்யாவின் ஸ்புட்னிக் V தடுப்பு மருந்து வரும் செப்டம்பர் மாதம் முதல் இந்தியாவில் தயாராகவுள்ளது. இதற்கான அனுமதியைசீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனம் பெற்றுள்ளது. இத்தகவலை ரஷ்யாவின் ஆர்டிஎஃப்ஐ (Russian Direct Investment Fund) நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதனையடுத்து செப்டம்பர் தொடங்கி ஆண்டுக்கு 30 கோடி தடுப்பூசிகளை சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனம் தயாரிக்கும் திட்டமுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியாவுக்கு ஏற்கெனவே வைரஸ் செல்லையும், வெக்டார் மாதிரிகளையும் ரஷ்யாவின் காமாலேயாநிறுவனம் கொடுத்துள்ளது. இதற்கு இந்திய மருந்துகள் கட்டுப்பட்டு இயக்குநரகமும் அனுமதியளித்துள்ளதால் செல் கல்ச்சர் தொடங்கிவிட்டது.
இது குறித்து சீரம் நிறுவனத்தின் அடார் பூணாவாலா கூறும்போது, "ஆர்டிஎஃப்ஐ (Russian Direct Investment Fund)வுடன் இணைந்து ஸ்புட்னிக் V தடுப்பு மருந்தை தயாரிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். சோதனை ஓட்டமாக முதற்கட்ட டோஸ் தயாரிப்பு செப்டம்பரில் தொடங்குகிறது. அதன்பிறகு மாதந்தோறும் லட்சக்கணக்கில் தடுப்பூசிகள் தயாரிக்கப்படும். அதிக திறன் கொண்டதாகவும் பாதுகாப்பானதாகவும் ஸ்புட்னிக் V தடுப்பு மருந்து உள்ளதால், இந்திய மக்களுக்கும் உலக மக்களுக்கும் இந்தத் தடுப்பூசி கிடைக்கப்பெற வேண்டும். சர்வதேச தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனங்களும், அரசாங்கமும் இணைந்து கரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்"என்று கூறினார்.
ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிதியத்தின் சிஇஓ கிரில் டிமிட்ரியெவ், கூறுகையில், இந்த கூட்டு முயறி உலக நாடுகளுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணம். இந்தியா மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள மக்களின் உயிர் காக்கும் முயற்சி இது என்று கூறினார்.
டிசம்பருக்குள் இந்தியாவில் உள்ள தடுப்பூசி செலுத்திக் கொள்ளத் தகுதி கொண்ட அனைவருக்குமே தடுப்பூசி செலுத்தப்படும் என அரசு தெரிவித்துள்ள நிலையில் சீரம் நிறுவனம் ஸ்புட்னிக் V தடுப்பூசி தயாரிக்க அனுமதி பெற்றிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
தேசிய தடுப்பூசித் திட்டத்தின் நிபுணர் குழு தலைவர் மருத்துவர் என்.கே.அரோராவும் டிசம்பருக்குள் இந்திய அரசு தடுப்பூசி திட்டத்தை முழுமையாக செயல்படுத்தும்.ஆகஸ்ட் மாதம் தொடங்கி அன்றாடம் 16 முதல் 18 கோடி டோஸ் தடுப்பூசி உற்பத்தியாகும். அதன் பின்னர் செப்டம்பரில் இருந்து அன்றாடம் 30 கோடி டோஸ் தடுப்பூசி உற்பத்தி செய்யப்படும். என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT