Published : 13 Jul 2021 12:44 PM
Last Updated : 13 Jul 2021 12:44 PM
கரோனா தொற்றை தடுக்க இரு வெவ்வேறு நிறுவனத்தின் ஊசிகளை போட்டுக்கொள்ளலாம் என்று பரிந்துரை செய்வது ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
கரோனாவுக்கு எதிராக இரு வேறுபட்ட தடுப்பூசி டோஸ்களை செலுத்திக் கொண்டால் அதிக பாதுகாப்பு கிடைப்பதாக அண்மை காலமாக தகவல்கள் கூறப்பட்டு வருகின்றன. இதுகுறித்த சில ஆய்வுகள் நடந்து இருப்பதாகவும் அவ்வப்போது செய்திகள் வெளி வருகின்றன.
இரு டோஸ் ஆஸ்ட்ராஜென்கா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்ட பிறகு, வேறொரு தடுப்பூசியை பூஸ்டராக செலுத்திக் கொண்டால் அவர்களுக்கு வலுவான எதிர்ப்பு சக்தி உருவாகலாம் என பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவித்தது. ஆனால் இதனை உலக சுகாதார நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் கூறியதாவது:
பல நாடுகளில் கரோனா 2-வது அலை இன்னமும் முடிவுக்கு வரவில்லை. 3-வது அலை குறித்த எச்சரிக்கையும் தொடர்ந்து விடுக்கப்பட்டு வருகிறது. கரோனா பரவலில் இருந்து காத்துக் கொள்ள தடுப்பூசி மட்டுமே ஆயுதம்.
இப்போதுள்ள நிலையில் கரோனா தொற்றை தடுக்க இரு வெவ்வேறு நிறுவனத்தின் ஊசிகளை போட்டுக்கொள்ளலாம் என்று பரிந்துரை செய்வது ஆபத்தை ஏற்படுத்தக் கூடும். இன்னும் உலக சுகாதார நிறுவனம் அதில் ஒரு முடிவுக்கு வரவில்லை.
இதுவரை ஆய்வுகள் முடிந்து நமக்கு விடை கிடைக்கவில்லை. உரிய தரவுகளுடன் ஆய்வுகள் மேற்கொண்ட பிறகே இரு ஊசிகளை பயன்படுத்துவது பற்றி சிந்திக்க வேண்டும். கரோனாவுக்காக இருவேறு தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளலாம் என்று கூறுவது சரியான நடவடிக்கை அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT