Published : 12 Jul 2021 08:35 PM
Last Updated : 12 Jul 2021 08:35 PM
மக்கள் தொகையை சட்டத்தால் கட்டுப்படுத்த முடியாது என பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
மத்தியில் கூட்டணியில் இருந்தாலும் கூட நிதிஷ்குமார் தனது எதிர்ப்புக் குரலை பதிவு செய்வதில் தவறுவதில்லை.
அந்த வரிசையில் பாஜக ஆளும் மாநிலங்களான உத்தரப் பிரதேசம் மற்றும் அசாம் கொண்டுவந்துள்ள மக்கள் தொகை கட்டுப்பாடு வரைவுச் சட்டம் குறித்து அவர் எதிர்ப்புக் குரலைப் பதிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மாநில அரசுகள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், சட்டத்தால் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த முடியும் என்று நான் நம்பவில்லை. சீனாவில் இல்லாத கடுமையான சட்டமா? அதையே ஓர் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாமே.
பெண்களின் கல்வி கற்கும் விகிதம் அதிகரிக்கும்போது, குழந்தைப் பேறு விகிதம் கணிசமாகக் குறைவதை நான் அண்மையில் தெரிந்து கொண்டேன். ஆம், பெண்கள் கல்வியறிவு பெற்றால் தேவையற்ற குழந்தைப் பேறை அவர்கள் தவிர்த்துவிடுகின்றனர். பெண் கல்வி மேலும் மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் 2040ல் இந்திய மக்கள் தொகை வீழ்ச்சி காணும். ஆனால், சிலர் சட்டங்களை இயற்றி மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த நினைக்கின்றன.
நாங்கள் பெண் கல்வியை நம்பியிருக்கிறோம். ,மக்கள் தொகை கட்டுப்பாடு என்பது ஒரு தனிப்பட்ட சமூகம் சார்ந்தது அல்ல. பெண் கல்வியை ஊக்குவிக்கும் போது அனைவருக்குமே நன்மை கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, உத்தரப் பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு நடவடிக்கைகள எடுத்து வருகிறது. இந்த தேர்தலுக்கு முன்னதாக மக்கள் தொகை கட்டுப்பாட்டு வரைவுச் சட்டம் இயற்ற அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT