Published : 12 Jul 2021 07:21 PM
Last Updated : 12 Jul 2021 07:21 PM
நேபாளத்தில் 679 மெகாவாட் லோயர் அருண் நீர்மின் உற்பத்தித் திட்டத்தை செயல்படுத்துவதற்காக இந்திய எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் பொதுத்துறை நிறுவனமாக செயல்படும் சட்லஜ் ஜல் வித்யுத் நிகாம் (எஸ்ஜேவிஎன்) மற்றும் நேபாளத்தின் காத்மாண்டுவில் உள்ள நேபாள முதலீட்டு வாரியத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்திய அரசின் எரிசக்தி அமைச்சகத்தின் ஆதரவுடன் சர்வதேச ஏலத்தில் இதர அண்டை நாடுகளின் நிறுவனங்களை வீழ்த்தி எஸ்ஜேவிஎன் நிறுவனம் இந்தத் திட்டத்தை வென்றுள்ளது.
நேபாள நாட்டின் துணை பிரதமர் பிஷ்ணு பிரசாத் பாடல் மற்றும் இந்திய தூதர் வினய் மோகன் க்வாத்ரா ஆகியோர் முன்னிலையில் எஸ்ஜேவிஎன் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் நந்த் லால் ஷர்மா மற்றும் நேபாள முதலீட்டு வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுசில் பட்டா ஆகியோர் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
லோயர் அருண் நீர்மின் உற்பத்தித் திட்டம், நேபாளத்தின் சங்குவசபா மற்றும் போஜ்பூர் மாவட்டங்களில் அமைந்துள்ளது. இந்தத் திட்டத்தில் நீர் தேக்கம் அல்லது அணைகள் அமைக்கப்படாது. 4 ஃபிரான்சிஸ் வகை சுழலிகளை இந்தத் திட்டம் கொண்டிருக்கும்.
இத்திட்டம் நிறைவடைந்த பிறகு ஆண்டிற்கு 2970 மில்லியன் அலகு மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். கட்டுமான பணிகள் தொடங்கியது முதல் 4 ஆண்டுகளுக்குள் இத்திட்டத்தை நிறைவேற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கட்டுமானம் உரிமை இயக்கம் மாற்ற அடிப்படையில் 25 ஆண்டுகளுக்கு இத்திட்டம் எஸ்ஜேவிஎன் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் தற்போதைய உற்பத்தித் திறனான 2016.51 மெகாவாட்டை 2023-ம் ஆண்டில் 5000 மெகாவாட்டாகவும், 2030-ஆம் ஆண்டில் 12,000 மெகாவாட்டாகவும், 2040-ஆம் ஆண்டில் 25,000 மெகாவாட்டாகவும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நீர் மின்சாரம், காற்றாலை மின்சாரம், சூரிய மின் சக்தி மற்றும் அனல் மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு எரிசக்தியின் உற்பத்தியில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT