Published : 12 Jul 2021 04:43 PM
Last Updated : 12 Jul 2021 04:43 PM

சுற்றுலா, ஆன்மிக பயணத்தை தற்காலிகமாக தவிர்க்கலாம்: கரோனா மூன்றாவது அலை குறித்து எச்சரிக்கும் இந்திய மருத்துவக் கழகம்

சுற்றுலா மற்றும் ஆன்மிக புனிதப் பயணங்களை பொது மக்கள் தள்ளிப்போடலாம். இல்லாவிட்டால் கரோனா மூன்றாவது அலை நெருங்குவதைத் தவிர்க்க முடியாது என இந்திய மருத்துவக் கழகம் (IMA) எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், கரோனா தடுப்பு நடவடிக்கைகளை இன்னும் சில காலத்துக்காவது மக்கள் தீவிரமாகக் கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக ஐஎம்ஏ கூறியிருப்பதாவது:

இப்போதுதான் நாம் இரண்டாவது அலையிலிருந்து மெல்ல மீண்டு வருகிறோம். அரசாங்கமும், மருத்துவ முன்களப் பணியாளர்களும் இணைந்து இதனை சாத்தியப்படுத்தியிருக்கின்றன.

ஆனால், இப்போது அரசும், மக்களும் காட்டும் அலட்சியம் அச்சமூட்டுவதாக உள்ளது.

இதுவரை உலகம் கண்ட பெருந்தொற்றுகள் பலவும் மூன்றாவது அலை வரலாறு கொண்டதாகவே உள்ளன. அதனால், இந்தியாவில் கரோனா மூன்றாவது அலையையும் நாம் எதிர்பார்க்கலாம். ஆனால், அதை தவிர்க்கவும் முடியும் என்ற வாய்ப்பிருந்தும், அலட்சியம் காட்டப்படுவது அச்சமூட்டுகிறது.

நாட்டின் பல பகுதிகளிலும் சுற்றுலா தலங்களில் கூட்டம் குவிந்தி வருகிறது. கோயில் புனித தலங்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாகக் குவிகின்றனர். பொது மக்களும் சரி மத்திய, மாநில அரசுகளும் சரி அலட்சியத்துடன் செயல்படுவதாகவே தோன்றுகிறது.

சுற்றுலாவும், புனிதப் பயணங்களும், மதக் கூடல்களும் முக்கியமே. ஆனால், இவை தற்காலிகமாக தள்ளிவைக்கப்படலாம். எல்லாவற்றிற்கும் அனுமதி கொடுத்து மக்கள் பொது இடங்களில் கூடுவதை அனுமதிப்பது ஆபத்தானது. அதுவும் பலரும் இன்னும் ஒரு டோஸ் தடுப்பூசி கூட இருக்கும் சூழலில் இந்த மாதிரியான ஒன்றுகூடல் மூன்றாவது அலைக்கு வித்திடும் காரணியாக அமைந்துவிடும்.

அரசு ஒரு கரோனா நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதால் ஏற்படும் பொருளாதார பாதிப்பை ஒப்பிடுகையில், இத்தகைய பொது இடங்களில் மக்கள் கூடுவதைக் கட்டுப்படுத்துவதால் ஏற்படும் இழப்பு குறைவானதே.

உலகம் முழுவதுமிருந்து கிடைக்கப்பெற்றுள்ள ஆதாரங்களின் அடிப்படையில் பார்த்தாலும், தடுப்பூசித் திட்டத்தை வேகப்படுத்துவதன் மூலமும், கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் தீவிரமாகப் பின்பற்றுவதை உறுதி செய்வதன் மூலமும் தான் கரோனா மூன்றாவது அலையைத் தடுக்க முடியும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வீடியோ மூலம் வேண்டுகோள்:

இதுதவிர வீடியோ மூலம் கோரிக்கை விடுத்துள்ளார் ஐஎம்ஏ தலைவர் டாக்டர் ஜான்ரோஸ் ஆஸ்டின் ஜெயலால். அந்த வீடியோவில் அவர், "பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளது போல் கரோனா பெருந்தொற்றுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவோம். பெருங்கூட்டங்களைத் தவிர்ப்போம். அடுத்த இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு நாம் மூன்றாவது அலையை வரவேற்கும் எவ்வித ஆபத்தான செயலையும் செய்யாமல் இருப்போம்" என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x