Published : 12 Jul 2021 04:29 PM
Last Updated : 12 Jul 2021 04:29 PM
மலங்கரா மரபுவழி சிரியன் தேவாலயத்தின் தலைவர் பேசிலியாஸ் மார் தோமா பவுலோஸ் நுரையீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று காலமானார். அவருக்கு வயது 74.
மலங்கரா மரபுவழி சிரியன் தேவாலயத்தின் கிழக்கு கத்தோலிக்கப் பிரிவின் தலைவராக 2-வது பேசிலியாஸ் மார் தோமா பவுலோஸ் இருந்தார்.
இதுகுறித்து தேவாலய நிர்வாகம் தரப்பில் கூறுகையில், “கேரளாவின் பத்தினம்திட்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் பவுலோஸ் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை 2.35 மணிக்குக் காலமானார்.
2019-ம் ஆண்டிலிருந்து நுரையீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. கரோனாவில் இருந்து மார் தோமா குணமடைந்த நிலையில் நுரையீரல் தொற்று மட்டும் இருந்து வந்தது” எனத் தெரிவித்தனர்.
திங்கள்கிழமை இரவு 7 மணிவரை மார் தோமா பவுலோஸ் உடல் மக்களின் பார்வைக்காக பருமலா தேவாலயத்தில் வைக்கப்படும். அதன்பின் செவ்வாய்க்கிழமை கோட்டயத்தில் உள்ள தேலோகம் மலங்கரா சிரியன் தேவாலய தலைமையிடத்தில் இறுதிச் சடங்கு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலங்கரா கிழக்கு கத்தோலிக்க 8-வது மதகுரு பேசிலஸ் மார் தோமா பவுலோஸ் ஆவார். 1946-ம் ஆண்டு ஆகஸ்ட் 30-ம் தேதி குன்னங்களத்தில் பவுலோஸ் பிறந்தார். கோட்டயத்தில் உள்ள சிஎம்எஸ் கல்லூரியில் முதுகலைப் பட்டப்படிப்பு முடித்தவர் பவுலோஸ். 1972-ம் ஆண்டு தேவாலய நிர்வாகி ஆனார். 1985-ம் ஆண்டு பேராயர் பட்டம் வழங்கப்பட்டது. 1985-ம் ஆண்டு குன்னங்குளம் மறை மாவட்டத்தின் தலைவராகவும், 2006-ம் ஆண்டு கத்தோலிக்க பிரதிநிதியாகவும் பவுலோஸ் நியமிக்கப்பட்டார்.
பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்ட இரங்கல் செய்தியில், “இந்திய மரபுவழி தேவாலயத்தின் புனித பேசிலஸ் மார்தோமா பவுலோஸ் மறைவு கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். சிறந்த பல சேவைளைச் செய்து, கருணை உள்ளத்துடன் பவுலோஸ் வாழ்ந்தார். மரபுவழி தேவாலயத்தைச் சேர்ந்தவர்கள் அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT