Published : 12 Jul 2021 03:59 PM
Last Updated : 12 Jul 2021 03:59 PM
12 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசிக்கு ஜைடஸ் கெடிலா மருந்து நிறுவனம் அனுமதி கோரியுள்ள நிலையில், அதற்கு அனுமதியளிக்க இன்னும் சில நாட்கள் ஆகலாம் மத்திய சுகாதார அமைச்சக அதிகார வட்டம் தெரிவிக்கின்றது.
முன்னதாக, 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசித் தயாரித்துள்ள பெங்களூருவைச் சேர்ந்த ஜைடஸ் கெடிலா மருந்து நிறுவனம் தான் கண்டுபிடித்த ஜைகோவ்-டி(ZyCoV-D) மருந்தை அவசரப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தக் கோரி இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பிடம்(டிஜிசிஐ) அனுமதி கோரியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்குப் பேட்டியளித்த ஜைடஸ் கெடிலா மருந்து நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள், "ஜைகோவ்-டி (ZyCoV-D) மருந்து முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனையில் நல்ல பலனைக் காட்டியுள்ளது. மூன்றாவது கட்ட பரிசோதனை தர்போது நடைபெற்று வருகிறது. இதில் 28,000 தன்னார்வலர்கள் கலந்து கொண்டுள்ளனர்" என்று கூறியுள்ளனர்.
ஜைகோவ்-டி மூன்று கட்ட கிளினிக்கல் பரிசோதனையிலும் சிறந்த பலன்களை அளித்தால் இந்தத் தடுப்பூசியை ஆகஸ்ட் - செப்டம்பர் இடைப்பட்ட காலத்தில் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரலாம்" என நிதி ஆயோக் உறுப்பினர் மருத்துவர் வி.கே.பால் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால், மூன்றாம் கட்ட பரிசோதனை முழுமையாக முடியாததால், இதற்கான அனுமதிக்கு இன்னும் சில காலம் எடுக்கலாம் என்று மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள் 'தி இந்து' ஆங்கில நாளிதழிடம் கூறியுள்ளனர்.
ஜைடஸ் கெடிலா நிறுவனத்தின் ஜைகோவ்-டி தடுப்பூசி 3 டோஸ்களைக் கொண்டது. முதல் டோஸ் எடுத்துக்கொண்டபின் 28வது நாளில் 2-வது டோஸும், 56-வது நாளில் 3-வது டோஸும் செலுத்த வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு வழங்கப்படுவது போல் அல்லாமல் இந்தத் தடுப்பூசி நீடில்லெஸ் தொழில்நுட்பத்தில் இந்தத் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. தடுப்பு மருந்தை ஊசி மூலம் தசைக்குள் செலுத்தாமல், தோல் பகுதியில் ஹைப்போடெர்மிக் நீடில் (hypodermic needle) மூலம் செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 38.86 கோடி பேருக்கு தடுப்பூசி:
தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதால் திட்டத்தைத் தொய்வின்றி செயல்படுத்த முடியவில்லை என்று பல்வேறு மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் குற்றச்சாட்டிவருகின்றன. இந்நிலையில், இதுவரை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 38.86 கோடி (38,86,09,790) பேருக்கு கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் 63,84,230 தடுப்பூசிகள் விரைவில் வழங்கப்படவிருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இன்று காலை வரை 37,31,88,834 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்பட்டி மாநிலங்கள் வசம் மொத்தம் 1.54 கோடி டோஸ் தடுப்பூசி மருந்து உள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
அதிகரிக்கும் 'லாங்க் கோவிட்' தாக்கம்:
இதற்கிடையில், கரோனாவால் பாதிக்கப்பட்டோர் 4 முதல் 12 வாரங்களுக்கு தொற்றுடன் இருக்கும் 'லாங் கோவிட்' நிலை அதிகரித்துள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. சுவாசம், இதயம், நரம்பு, தசைகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு நீண்ட கால அயர்ச்சியையும் லாங் கோவிட் நோயாளிகள் அனுபவிக்கின்றனர் என்று டெல்லி மூல்சந்த் மருத்துவமனையில் மூத்த மருத்துவர் ஹண்டா தெரிவித்துள்ளார்.. அதுவும் கரோனாவால் பாதிக்கப்பட்ட வயதானோர் மற்றும் இணை நோய் கொண்டோருக்கே இந்த பாதிப்பு அதிகமாக இருக்கிறது என்று அவர் கூறியிருக்கிறார். ஆஸ்துமா போன்ற சுவாசப்பாதை நோய் கொண்டோருக்கு கரோனா நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்துவது உறுதியாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT