Published : 12 Jul 2021 03:57 PM
Last Updated : 12 Jul 2021 03:57 PM
கரோனாவை எதிர்கொள்ள மத்திய அரசு ரூ. 23,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் இதன் மூலம் அடுத்த 6 மாதங்களில் மருத்துவ திறன் கட்டமைப்பை மேம்படுத்தப்படும் என மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் பாவ்நகரில் உள்ள சர் தக்தசின்ஹிஜி மருத்துவமனையில் பிரத்தியேக அழுத்த விசை உறிஞ்சுதல் தொழில்நுட்பத்தில் செயல்படும் (பிஎஸ்ஏ) 2 மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சர் மன்சுக் மாண்டவியா காணொலிக் காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.
நிமிடத்திற்கு 1000 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இந்த ஆலைகளுடன் செப்பு குழாய் இணைப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய தீயணைப்பு அமைப்புமுறை மற்றும் தானியங்கி ஆக்சிஜன் ஆதார மாற்று அமைப்புமுறையும் துவக்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இந்த வசதி, பாவ்நகர் மக்களுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. இதுபோன்று சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வசதிகள், நெருக்கடி தருணத்தில் நாட்டிற்கு உதவிகரமாக இருக்கும் என்று தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை மீண்டும் வலியுறுத்திய மன்சுக் மாண்டவியா கோவிட் தொற்றிலிருந்து நம் நாட்டை பாதுகாப்பதற்காக ஒட்டுமொத்த சமூகத்துடன் கூடிய அணுகுமுறையின் வாயிலாக மக்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கத்தோடு நாடு பணியாற்றி வருவதாகக் கூறினார்.
குறுகிய காலத்தில் 4,000 மெட்ரிக் டன்னில் இருந்து 12,000 மெட்ரிக் டன்னாக ஆக்சிஜன் உற்பத்தி அதிகரிக்கப்பட்டது, அரசு மற்றும் தனியார் துறையின் வெவ்வேறு பங்குதாரர்கள் இடையேயான ஒத்துழைப்பிற்கான சான்றாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
தொடரும் கோவிட்-19 தொற்றின் சவால் பற்றி பேசிய அவர், ஆக்சிஜன் விநியோகம், மருத்துவமனை படுக்கைகள், மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இரண்டாவது அலையில் நாம் கற்றுள்ளோம். அவசரகாலத்தில் தேவைப்படும் மருத்துவ உபகரணங்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் வாங்குவதற்கு போதிய நிதி உதவியை தற்போது நாம் உறுதி செய்துள்ளோம். கோவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், ரூ.23,000 கோடி மதிப்பிலான தொகுப்பிற்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் வழங்கியுள்ளது.
குழந்தைகளுக்கு தரமான மருத்துவ சேவையை வழங்குவதற்காக அனைத்து மருத்துவமனைகளிலும் குழந்தைகள் மருத்துவப் பிரிவில் போதிய வசதிகளை ஏற்படுத்தியுள்ளோம். மருத்துவ நெருக்கடி காலத்தின் போது பயன்படுத்தும் வகையில் மாநில மற்றும் மத்திய அளவில் இடையே பங்கு முறையையும் உருவாக்கி வருகிறோம். இந்த கோவிட் தொகுப்பின் வாயிலாக அடுத்த 6 மாதங்களில் விரிவான திட்டம் மற்றும் திறன் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT