Published : 11 Jul 2021 08:21 PM
Last Updated : 11 Jul 2021 08:21 PM

உ.பி. அமைச்சர்களுக்கு எத்தனை குழந்தைகள்?- மக்கள் தொகை சட்டம்; சல்மான் குர்ஷித் சரமாரி கேள்வி

லக்னோ

உத்தர பிரதேசத்தில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு அரசு வேலை இல்லை என சட்டம் கொண்டு வரும் அம்மாநில பாஜக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் உ.பி. அமைச்சர்களுக்கு எத்தனை குழந்தைகள் உள்ளன என கேள்வி எழுப்பியுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு நடவடிக்கைகள எடுத்து வருகிறது. இந்த தேர்தலுக்கு முன்னதாக மக்கள் தொகை கட்டுப்பாட்டு வரைவுச் சட்டம் இயற்ற அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கான வரைவு மசோதா தயாரிக்கப்பட்டு பொதுமக்களிடமிருந்து பரிந்துரைகள் கேட்கப்படுகிறது. ஜூலை 19-ம் தேதிக்கு முன்பாக கருத்துக்களை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சட்ட மசோதா மாநில சட்ட இணையளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

உத்தர பிரதேசத்தில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் அரசு வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது. அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வும் கிடையாது.

2 குழந்தைகள் மட்டும் பெற்றவர்களுக்கு தேசிய பென்சன் திட்டத்தில் ஊழியர்களின் பங்களிப்பில் கூடுதலாக 3 சதவீத படி உயர்த்தி தரப்படும். 2 குழந்தைகள் பெற்று கொண்டவர்களுக்கு, அவர்களது பணிக்காலத்தில் கூடுதலாக 2 இன்க்ரிமென்ட் வழங்கப்படும். அல்லது பேறு கால விடுமுறை 12 மாதம் முழு சம்பளத்துடன் வழங்கப்படும்.

இதனைத் தவிர குடும்ப கட்டுப்பாடு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொகை கட்டுப்பாடு குறித்து உயர்நிலை வகுப்பில் பாடம் சேர்க்கப்படும். அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மகப்பேறு மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த மையங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து குடும்ப கட்டுப்பாடு முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும். கர்ப்பிணிகள், குழந்தை பிறப்பு மற்றும் இறப்பு ஆகியவற்றை பதிவு செய்வது கட்டாயமாக்கப்படும்.

இவ்வாறு அந்த வரைவு மசோதாவில் கூறப்பட்டு உள்ளது.

நீதிபதி மிட்டல் தலைமையிலான குழு இந்த வரைவு மசோதவை உருவாக்கியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று வெளியிட்டார்.

மக்கள் தொகை கொள்கை திட்டம் 2021- 2030 என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள செயல் திட்டத்தில் மக்கள் தொகை கட்டுப்பாட்டை பின்பற்ற மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் கூறியதாவது:

இந்த சட்டத்தை முதலில் பாஜக அரசு தன்னிடம் இருந்து அமல்படுத்த வேண்டும். அமைச்சர்களுக்கு எத்தனை குழந்தைகள் உள்ளன. முறைபடியாக பிறந்த குழந்தைகள், முறையற்ற முறையில் பிறந்த குழந்தைகளையும் எண்ண வேண்டும்.

அவ்வாறு இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ள அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அதன் பிறகே மற்றவர்களுக்கு இதனை அமல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x