Published : 10 Jul 2021 05:59 PM
Last Updated : 10 Jul 2021 05:59 PM
கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலையின் அறங்காவலரும், மூத்த ஆயுர்வேத மருத்துவருமான பி.கே. வாரியர் இன்று காலமானார். அவருக்கு வயது 100. அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கோட்டக்கல் ஆரிய வைத்தியசாலை உலக பிரசித்தி பெற்றது. இந்த வைத்திய சாலையின் அறங்காவலர் பி.கே. வாரியார் 100 வயதிலும் ஆயுர்வேத மருத்துவத் துறையில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார். கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலையின் நிர்வாகத்தையும் கவனித்து வந்தார்.
கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலையை நிறுவிய பி.எஸ்.வாரியர் 1944-ல் காலமானார். அவருக்குப்பின் அவரது மருமகன் பி.எம் வாரியர் பொறுப்பேற்றார். 1953-ல் விமானவிபத்தில் அவரும் இறந்துவிட அவரது சகோதரர் பி.கே.வாரியர் அறங்காவலர் ஆனார்.
பன்னியம்பள்ளி கிருஷ்ணவாரியர் என்பதன் சுருக்கமே பி.கே.வாரியர். அவர் பொறுப்பேற்ற பின்னரே கோட்டக்கல் உலக அளவில் பிரசித்தி பெற்றது. 100 வயதான பி.கே.வாரியர் கோட்டக்கலில் உள்ள அவரது கைலாசமந்திரம் இல்லத்தில் இன்று காலமானார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் “டாக்டர் பி கே வாரியரின் மறைவை அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். ஆயுர்வேதத்தை பிரபலப்படுத்துவதில் அவரது பங்களிப்பு என்றும் நினைவில் கொள்ளப்படும். அன்னாரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது இரங்கல்கள். ஓம் சாந்தி” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
பி.கே.வாரியருக்கு 1999-ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும், 2010-ல் பத்ம பூஷண் விருதும் வழங்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT