Published : 09 Jul 2021 06:26 PM
Last Updated : 09 Jul 2021 06:26 PM
60 ஆயிரம் கிலோமீட்டருக்கு உலகத்தரம் வாய்ந்த தேசிய நெடுஞ்சாலைகளை கட்டமைப்பது தனது லட்சியம் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.
இந்தியாவில் சாலைகள் வளர்ச்சி குறித்த 16-வது வருடாந்திர மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, சாலை உபகரணங்களுக்கு அழுத்தமூட்டப்பட்ட இயற்கை எரிவாயு, திரவ இயற்கை எரிவாயு மற்றும் எத்தனால் ஆகியவை பயன்படுத்தப்பட வேண்டும் என்றார். இறக்குமதியை குறைத்து குறைந்த விலையில் மாசில்லா மாற்று எரிபொருளை உள்நாட்டிலேயே உருவாக்க அமைச்சர் வலியுறுத்தினார்.
63 லட்சம் கிலோமீட்டர் சாலைகளுடன் உலகின் இரண்டாவது மிகப்பெரிய சாலை கட்டமைப்பை இந்தியா கொண்டுள்ளதாக அவர் கூறினார். சரக்கு போக்குவரத்தில் 70 சதவீதமும் பயணிகள் போக்குவரத்தில் 90 சதவீதமும் சாலைகளில் நடைபெறுவதால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சாலைகளுக்கு முக்கிய பங்குண்டு என்றும் அவர் கூறினார்.
அடுத்த ஐந்து வருடங்களில் இந்தியாவை ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உருவாக்க பிரதமர் நரேந்திர மோடி இலக்கு நிர்ணயித்துள்ளதாக கூறிய கட்கரி, ரூபாய் 111 லட்சம் கோடியை தேசிய உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு இந்த ஆண்டு அரசு முதலீடு செய்து வருவதாகவும், உள்கட்டமைப்பு மூலதன செலவை 34 சதவீதமாக அதிகரித்து ரூ 5.54 லட்சம் கோடியாக அரசு உயர்த்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.
உள்கட்டமைப்பு முதலீடு அதிகரிக்கப்பட்டுள்ளதன் மூலம் கரோனா பெருந்தொற்றின் போது வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றார். ஒரு நாளைக்கு 40 கிலோமீட்டர் என்று 60 ஆயிரம் கிலோமீட்டருக்கு உலகத்தரம் வாய்ந்த தேசிய நெடுஞ்சாலைகளை கட்டமைப்பது தனது லட்சியம் என்றும் அமைச்சர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT