Published : 09 Jul 2021 05:37 PM
Last Updated : 09 Jul 2021 05:37 PM
பிரதமரின் நல நிதியிலிருந்து வாங்கப்படும் பிஎஸ்ஏ ஆக்சிஜன் ஆலைகள் அமைக்கவும், இதன் மூலம் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட படுக்கைகளுக்கு ஆக்சிஜன் விநியோகிக்கும் திறனை உறுதி செய்யவும் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
நாடு முழுவதும் ஆக்சிஜன் ஆலைகள் அதிகரிப்பு மற்றும் முன்னேற்ற பணிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆய்வு செய்தார். நாடு முழுவதும் பிஎஸ்ஏ ஆக்சிஜன் ஆலைகள் அமைப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் பற்றி பிரதமரிடம் அதிகாரிகள் விளக்கினர்.
நாடு முழுவதும் 1500க்கும் மேற்பட்ட பிஎஸ்ஏ ஆக்சிஜன் ஆலைகள் வரவுள்ளன. இவற்றில் பிரதமர் நல நிதி, பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்களிப்பிலிருந்து வாங்கப்படும் ஆக்சிஜன் ஆலைகளும் உள்ளடங்கியுள்ளன.
பிரதமரின் நல நிதியில் இருந்து வாங்கப்படும் பிஎஸ்ஏ ஆக்சிஜன் ஆலைகள், நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் வரவுள்ளன. பிரதமரின் நலநிதியில் இருந்து வாங்கப்படும் பிஎஸ்ஏ ஆக்சிஜன் ஆலைகள் செயல்பாட்டுக்கு வந்தவுடன், அவை 4 லட்சம் படுக்கைளுக்கு ஆக்சிஜன் விநியோகிக்கும் என பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆலைகள் விரைவில் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும், இதற்காக மாநிலங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தினார்.
ஆக்சிஜன் ஆலைகளை விரைவில் செயல்படுத்துவது தொடர்பாக, மாநில அரசுகளின் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக பிரதமரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆக்சிஜன் ஆலைகளின் செயல்பாடு மற்றும் பராமரிப்பில், மருத்துவமனை ஊழியர்களுக்கு போதிய பயிற்சியை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளை பிரதமர் கேட்டுக் கொண்டார். ஒவ்வொரு மாவட்டத்திலும் பயிற்சி பெற்ற ஊழியர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆக்சிஜன் ஆலை பராமரிப்பு குறித்த பயிற்சி மாதிரி நிபுணர்களால் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், நாடு முழுவதும் 8000 பேருக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பிரதமரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
உள்ளூர் மற்றும் தேசிய அளவில் ஆக்சிஜன் ஆலைகள் செயல்பாட்டை கண்காணிக்க, இணையதளம் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பத்தை நாம் ஈடுபடுத்த வேண்டும் என பிரதமர் கூறினார். ஆக்சிஜன் ஆலைகளின் செயல்பாட்டை கண்காணிக்க இணையதளம் போன்ற முன்மாதிரி திட்டத்தை பயன்படுத்தி வருவது பற்றி பிரதமருக்கு அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.
பிரதமரின் முதன்மை செயலாளர், அமைச்சரவை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை செயலாளர் மற்றும் முக்கிய அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT