Published : 09 Jul 2021 05:22 PM
Last Updated : 09 Jul 2021 05:22 PM
நாம் இன்னமும் கரோனா 2-வது அலையை முழுமையாகக் கடக்கவில்லை. இதுவரை இந்தியாவில் லாம்ப்டா வைரஸ் கண்டறியப்படவில்லை என்று நிதி ஆயோக் சுகாதாரப்பிரிவு உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் உருமாறி இன்று உலக நாடுகளில் ஆல்ஃபா, டெல்டா, காமா, கப்பா என்று பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. இந்நிலையில், லத்தீன் அமெரிக்க நாடுகளில் லாம்ப்டா என்ற புதிய வகை உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் பரவி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு கூறும்போது, "லாம்ப்டா என்ற உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெருவில் கண்டறியப்பட்டது.
இந்த வகையான வைரஸ் 29 அமெரிக்க நாடுகளில் பரவியுள்ளது. குறிப்பாக அர்ஜெண்டினா, சிலி போன்ற நாடுகளில் இந்த வகை வைரஸ் பரவியுள்ளது. இந்த உருமாற்றம் அடைந்த வைரஸின் தாக்கம் கண்காணிக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது டெல்டா வைரஸை விட அதிக விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது என்று இங்கிலாந்து சுகாதார மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் இதுவரை லாம்ப்டா வைரஸ் கண்டறியப்படவில்லை என்று நிதி ஆயோக் சுகாதாரப்பிரிவு உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், "நாம் இன்னமும் கரோனா 2வது அலையை முழுமையாகக் கடக்கவில்லை. இந்த சூழலில் நாம் நம் பாதுகாப்பு நடவடிக்கைகளில் சுணக்கம் காட்டக்கூடாது. பொது இடங்களில் சமீப நாட்களாக மக்கள் ஒன்றுகூடுகை அதிகமாக உள்ளது. அவ்வாறு கூடும்போது சமூக இடைவெளி, முகக்கவசம் உள்ளிட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுதல் சற்று குறைவாகவே உள்ளது. நாம், நமது பாதுகாப்பு நடவடிக்கைகளில் சமரசம் செய்யக்கூடாது.
பிரிட்டன், ரஷ்யா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் கரோனா மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது.
நம் நாட்டில் அன்றாட பாதிப்பு குறைந்துள்ளது. நோய்த் தொற்றிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை 97.2% என்றளவில் உள்ளது. இருந்தாலும் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் மறந்துவிடக் கூடாது. அரசும் கண்காணிப்பைக் கைவிட்டுவிடக் கீடாது. சுற்றுலாதலங்களில் காணப்படும் கூட்டம் கவலையளிக்கிறது.
தடுப்பூசியைப் பொறுத்தவரை கர்ப்பிணிப் பெண்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும், கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. கர்ப்பிணிகளுக்கு மூன்று விதமான தடுப்பூசிகளை அரசு பரிந்துரைத்துள்ளது. அவற்றில் ஏதேனும் ஒன்றை அவர்கள் தைரியாமகப் போட்டுக் கொள்ளலாம். இதுவரை வந்த தரவுகள் கர்ப்பிணிகளுக்கு கரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என்றே தெரிவிக்கின்றன.
இதுவரை இந்தியாவில் லாம்ப்டா வைரஸ் கண்டறியப்படவில்லை. ஆனால் லாம்ப்டா வைரஸும் கவலை அளிக்கக்கூடிய வைரஸாகவே இருக்கிறது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT