Published : 09 Jul 2021 04:27 PM
Last Updated : 09 Jul 2021 04:27 PM
ஆல்ஃபா, டெல்டா வகை உருமாறிய கரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தில் இரண்டு பேருக்கு கப்பா வைரஸ் தொற்று இருப்பதும் உறுதியாகியுள்ளது.
லக்னோவின் கிங் ஜார்ஜ் மருத்துவக் கல்லூரியில் கரோனா சிகிச்சை பெற்றவர்கள் இருவரின் ரத்த மாதிரிகளை மரபணு வரிசைப்படுத்தும் போது கப்பா வைரஸ் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 107 பேருக்கு டெல்டா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதும் உறுதியாகியுள்ளது.
இது குறித்து அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக இன்று உத்தரப் பிரதேச கரோனா நிலவரம் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில்தான் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநிலத்தின் கூடுதல் சுகாதாரச் செயலர் அமித் மோகன் கூறும்போது, "டெல்டா, கப்பா, ஆல்ஃபா ஆகிய மூன்று திரிபுகளுமே உத்தரப் பிரதேசத்தில் இருக்கின்றன. இவை அனைத்துமே தற்போது வழங்கப்படும் சிகிச்சை முறைகளுக்கே கட்டுப்படக் கூடியவை தான்.
தற்போது மாநிலத்தில் கரோனா பரவல் விகிதம் 0.04% என்றளவில் இருக்கிறது. அதாவது (நூறு பேரில் எத்தனை பேருக்கு தொற்று உறுதியாகிறது என்பதுதான் பாசிடிவிட்டி ரேட், தொற்று பரவல் விகிதம் என்று கூறப்படுகிறது) கப்பா வைரஸ் பற்றி அச்சம் கொள்ளத் தேவையில்லை.
இதுவும் மருத்துவ சிகிச்சையால் குணப்படுத்தக் கூடியதாகவே இருக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காகவே எந்த மாநிலத்தில் கப்பா வைரஸ் இருக்கிறது என்பது மட்டும் வெளியில் தெரிவிக்கப்படவில்லை" என்றார்.
வைரஸ் பெயர்கள் விவரம்:
உருமாறிய கரோனா வைரஸை எளிதாகக் கண்டறியும் வகையில், அடையாளப்படுத்தும் வகையில் உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது. ஆனால், அதன் அறிவியல் பூர்வமான பெயர் மாறவில்லை. பொதுத் தளத்தில் விவாதிக்கவும், அடையாளப்படுத்தவும் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன்படி பி.1.617.1 வகை வைரஸுக்கு 'கப்பா' என்றும் பி.1.617.2 வகை வைரஸுக்கு 'டெல்டா' என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
பிரிட்டனில் முதன் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா வைரஸ் பி.1.1.7 வைரஸை "ஆல்ஃபா" என்றும், தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட பி.1.351 வைரஸுக்கு ''பீட்டா'' என்றும், பிரேசிலில் கண்டறியப்பட்ட வைரஸுக்கு "காமா" என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கண்டறியப்பட்ட இரு வைரஸ்களுக்கு "கப்பா" என்றும், "டெல்டா" என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இப்பொது டெல்டா பிளஸ் வைரஸும் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT