Published : 09 Jul 2021 01:23 PM
Last Updated : 09 Jul 2021 01:23 PM
தடுப்பூசி விஷயத்தில் அரசியல் செய்யவில்லை என மத்திய அமைச்சர்கள் கூறுகின்றனர், ஆனால் உண்மையில் அது தான் நடக்கிறது என மகாராஷ்டிர மாநில அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருமான நவாப் மாலிக் குற்றம்சாட்டியுள்ளார்.
உலகம் முழுவதும் கரோனா பரவலைத் தடுக்க தடுப்பூசிகள் முக்கிய ஆயுதமாகப் பயன்படுகின்றன. அந்த வகையில் தொற்றிலிருந்து காத்துக் கொள்ளவும், கரோனாவின் அடுத்தடுத்த அலைகளிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளவும் உலக நாடுகள் கரோனா தடுப்பூசி செலுத்துவதைத் தீவிரப்படுத்தி வருகின்றன.
உலக அளவில அதிகமாக தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. மக்கள்தொகையின் அடிப்படைகள் அதிக அளவில் கரோனா தடுப்பூசியை செலுத்திய முதல் நாடுகளின் விவரத்தை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது.
உலக அளவில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோர் எண்ணிக்கை அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இதுவரை அமெரிக்க முதலிடத்தில் இருந்தது. தற்போது அந்த சாதனையை முறியடித்து அமெரிக்காவை இந்தியா 2-ம் இடத்துக்கு தள்ளியது. எனினும் இந்தியாவில் தடுப்பூசி தேவைக்கு ஏற்ப விநியோகம் இல்லை என்ற புகார் தொடர்ந்து எழுப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் கரோனா தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மகாராஷ்டிர மாநில அமைச்சருமான நவாப் மாலிக் கூறியுள்ளதாவது:
கரோனா தடுப்பூசி தொடர்பாக பல்வேறு புள்ளி விவரங்களை மத்திய அரசு கூறி வருகிறது. ஆனால் நடைமுறை வேறு மாதிரியாக உள்ளது. மாநிலங்களில் கள நிலவரம் மற்றொரு விதமாக உள்ளது. நாட்டின் பல பகுதிகளிலும் தடுப்பூசி பற்றாக்குறை தொடர்ந்து நீடித்து வருகிறது. தடுப்பூசி இல்லாததால் முகாம்கள் நிறுத்தப்படுகின்றன.
மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன் வரும்போது பற்றாக்குறை ஏற்படுவது கவலையை அளிக்கிறது. தடுப்பூசி இல்லாத நிலை ஏற்படக் கூடாது. இந்த விஷயத்தில் மத்திய அரசு கவனத்துடன் இருக்க வேண்டும். அதற்கு ஏற்ப பட்டியல் தயாரித்து மத்திய அரசு செயல்பட வேண்டும்.
தடுப்பூசி விஷயத்தில் அரசியல் செய்யவில்லை என மத்திய அமைச்சர்கள் கூறுகின்றனர். ஆனால் உண்மையில் அது தான் நடக்கிறது.
இவ்வாறு நவாப் மாலிக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT