Published : 09 Jul 2021 03:13 AM
Last Updated : 09 Jul 2021 03:13 AM

தெலங்கானா மாநிலம் உதயமானதில் சந்திரசேகர ராவின் குடும்பத்துக்கே லாபம்: புதிய கட்சியை தொடங்கி ஒய்.எஸ். ஷர்மிளா பேச்சு

ஹைதராபாத்

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியான ஒய்.எஸ்.ஷர்மிளா நேற்று தெலங்கானாவில், ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சிஎனும் புதிய கட்சியை தொடங்கினார். அப்போது அவர், தெலங்கானா மாநிலம் உருவானதில் முதல்வர் சந்திரசேகர ராவின் குடும்பம் மட்டுமே லாபம் அடைந்தது என சரமாரியாக குற்றம்சாட்டினார்.

மறைந்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் 72வது பிறந்தநாள் நேற்று ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் விமரிசையாக கொண்டாடப்பட்டது. புலிவேந்துலாவில் உள்ள இடுபுலபாயா ஒய்.எஸ்.ஆர் சமாதியில் நேற்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, இவரது தாயார் விஜயலட்சுமி, தங்கை ஒய்.எஸ். ஷர்மிளா மற்றும் அமைச்சர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அங்கிருந்து ஹைதராபாத்துக்கு வந்த விஜயலட்சுமி மற்றும் ஒய்.எஸ். ஷர்மிளா ஆகியோருக்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் ஹைதராபாத்தில் ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சி என தனது கட்சியின் பெயரை அறிவித்தார் ஒய்.எஸ். ஷர்மிளா. மேலும் கட்சியின் கொடியையும் அறிமுகப்படுத்தினார். இளம் பச்சை மற்றும் நீல வர்ணத்தில் உள்ள அந்த கொடியின் நடுவே வெள்ளை நிறத்தில் தெலங்கானா மாநில வரைபடமும், அதில் மறைந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் படமும் இடம் பெற்றுள்ளது. முன்னதாக ஷர்மிளாவின் தாயார் விஜயலட்சுமி பேசுகையில், ‘‘மறைந்த ஒய்.எஸ். ஆர் விட்டுச்சென்ற பணிகளை நிறைவு செய்யவே ஷர்மிளா அரசியலுக்கு வந்துள்ளார். அவரை மக்கள் ஆசீர்வதித்து வெற்றியடைய செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்’’ என்றார்.

இதனை தொடர்ந்து ஒய்.எஸ்.ஷர்மிளா பேசியதாவது:

ராஜசேகர ரெட்டியின் ஆட்சிக் காலம் ஆந்திராவின் பொற்காலம். ஏழைகள், விவசாயிகள், பெண்கள்என அனைவரும் பயன் பெற்றனர்.மக்களுக்கு இலவசக் கல்வி, இலவச மருத்துவத்தை வழங்கினார். குறைந்த வட்டியில் வங்கிக் கடன்வழங்கி மகளிரை அவரவர் வாழ்க்கையில் மேம்படுத்தினார். ஒய்.எஸ்.ஆர் இருந்தபோது கட்டத்தொடங்கிய அணைகள் இப்போது கூட கட்டிமுடிக்கப்படவில்லை. கரோனாவால் ஏழைகள், நடுத்தர மக்களின்வாழ்க்கை புரட்டி போடப்பட்டுள்ளது. ஆனால், இது குறித்து மாநிலஅரசு கண்டுக்கொள்ளாமல் உள்ளது. தெலங்கானா மாநிலம் உருவானதில் இங்குள்ள மக்கள் இதற்கு முன் எப்படி இருந்தார்களோ அப்படியே உள்ளனர். அவர்களின் வாழ்க்கை தரம் உயரவில்லை. ஆனால், முதல்வர் கே. சந்திரசேகர ராவின் குடும்பம் மட்டுமே இதனால் லாபமடைந்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x