Published : 08 Jul 2021 05:50 PM
Last Updated : 08 Jul 2021 05:50 PM
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சராக அனுராக் தாக்கூரும், இணை அமைச்சராக தமிழகத்தைச் சேர்ந்த எல்.முருகனும் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர்.
அனுராக் தாக்கூர் இதற்கு முன் நிதித்துறை இணை அமைச்சராக இருந்த நிலையில் அமைச்சரவை மாற்றத்தில் கேபினட் அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தகவல் ஒலிபரப்புத் துறையோடு சேர்த்து, விளையாட்டுத் துறையும் அனுராக் தாக்கூருக்கு வழங்கப்பட்டுள்ளது.
பிசிசிஐ அமைப்பின் முன்னாள் தலைவராக 2016 மே முதல் 2017 பிப்ரவரி வரை அனுராக் தாக்கூர் இருந்துள்ளார். பிசிசிஐ செயலாளராகவும், இமாச்சலப் பிரதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவும் அனுராக் தாக்கூர் இருந்துள்ளார்.
இமாச்சலப் பிரதேசத்தின் ஹமிர்பூர் தொகுதியிலிருந்து அனுராக் தாக்கூர் எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவரின் சகோதரர் அருண் துமால் தற்போது பிசிசிஐ பொருளாளராக உள்ளார்.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சராக அனுராக் தாக்கூர் இன்று பதவி ஏற்றுக்கொண்டபின் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “பிரதமர் மோடி எனக்கு மிகப்பெரிய பொறுப்பு அளித்துள்ளார்.
அதை நிறைவேற்ற சிறந்த பங்களிப்புகளை வழங்குவேன். தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறையை மக்களிடம் கொண்டுசெல்ல முழுமையாகச் செயல்படுவேன். கடந்த 7 ஆண்டுகளாக பிரதமர் மோடி சிறப்பாகச் செயல்படுகிறார். அவரின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்பச் செயல்பட்டு, என்னுடைய முன்னோர்கள் பெயரைக் காப்பேன்” எனத் தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் முன்னிலையில் இணை அமைச்சராக தமிழகத்தைச் சேர்ந்த எல்.முருகன் பதவியேற்றார். அவர் கூறுகையில், “எனக்கு அமைச்சர் பதவி வழங்கிய பிரதமர் மோடிக்கு எனது நன்றியைத் தெரிவிக்கிறேன். என்னுடைய கடமைகளைப் பொறுப்புடன் செய்வேன். தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்குப் போதுமான பிரதிநிதித்துவம் அளித்தமைக்கும் பிரதமர் மோடிக்கு நன்றி கூறுகிறேன்” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT