Published : 08 Jul 2021 03:24 PM
Last Updated : 08 Jul 2021 03:24 PM
விரிவாக்கம் செய்யப்பட்டு, மாற்றி அமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில் பாஜக, ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்களை விட, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகளுக்குத்தான் பிரதமர் மோடி அதிகம் முன்னுரிமை கொடுத்துள்ளார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மணிஷ் திவாரி வியப்பு தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையில் 2019-ம் ஆண்டில் அமைக்கப்பட்ட அமைச்சரவை கடந்த 2 ஆண்டுகளாக மாற்றி அமைக்கப்படவில்லை. அமைச்சர்களின் செயல்பாடு, திறமை, அடுத்தடுத்துவரும் மாநிலத் தேர்தல்கள் ஆகியவற்றை மனதில் வைத்து மத்திய அமைச்சரவை நேற்று மாற்றி அமைக்கப்பட்டது.
இதில் 30க்கும் மேற்பட்ட புதுமுகங்கள் கொண்ட 43 பேர் அமைச்சர்கள் பதவி ஏற்றனர். பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு 7 பெண் அமைச்சர்கள் இதுவரை நியமிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அமைச்சரவை விரிவாக்கம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் மணிஷ் திவாரி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், “மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது மீண்டும் எதைக் குறிப்பிடுகிறது என்றால், பாஜகவைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக பிரதமரின் முன்னாள் அதிகாரிகளையே அதிகமாகச் சார்ந்துள்ளதையே காட்டுகிறது.
உதாரணமாக ஹர்திப்பூரி, ஆர்கேசிங், அஸ்வின் வைஷ்ணவ் ஆகியோரைக் குறிப்பிடலாம். அதே நேரம், ராஜீவ் பிரதாப் ரூடி, சுதான்ஷூ திரிவேதி, ராகேஷ் சின்ஹா, ஷாநவாஸ் , பாஜக, ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள் கண்டுகொள்ளப்படாமல் இருப்பது வியப்பாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
மாற்றி அமைக்கப்பட்ட அமைச்சரவையில் இதற்கு முன் இணைஅமைச்சர்களாக இருந்த 7 பேர், கேபினட் அமைச்சர்களாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா ட்விட்டரில் கூறுகையில், “திறமையின் அடிப்படையில் மத்திய அமைச்சரவை மாற்றப்பட வேண்டும் என்றால், முதலில் பிரதமர் மோடியின் நிர்வாகத் தோல்விகளுக்காக அவரைத்தான் நீக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரையும் நீக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் அமைச்சரவையில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் அமைச்சர்களாக நியமிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்கும் ஜெய் சங்கர், ஹர்திப்சிங் பூரி, தற்போது ரயில்வே அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அஸ்வினி வைஷவ், ராம்சந்திர பிரசாத் சிங் ஆகியோர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT