Published : 08 Jul 2021 10:32 AM
Last Updated : 08 Jul 2021 10:32 AM
மத்திய அமைச்சரவை மாற்றப்பட்டத்தில் அதிகமான லாபமடைந்தவர் குஜராத்தைச் சேர்ந்த எம்.பி. மன்சுக் மாண்டவியாதான். இணையமைச்சர், தனித்துறை என முன்னேறி, தற்போது கேபினெட் பதவிக்கு மாண்டவியா உயர்ந்துள்ளார்.
பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், மாண்டவியா மீது அதிகமான நம்பிக்கை வைத்திருப்பதும், இதற்கு முன்தான் கவனித்த துறைகளை சிறப்பாகக் கையாண்டதால், சுகாதாரத்துறையை வழங்கியுள்ளனர். கரியமில வாயு வெளியேற்றத்தை குறைத்தல், காற்று மாசைக் குறைப்பை வலியுறுத்தி நாடாளுமன்றத்துக்கு அடிக்கடி சைக்கிளில் வந்தவர் மாண்டவியா என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன் கப்பல் போக்குவரத்துறைக்கான தனி அமைச்சராகவும், உரம் மற்றும் ரசாயனத்துறை இணைஅமைச்சராகவும் மாண்டவியா இருந்து வந்தார். இப்போது ரசாயனம் மற்றும் உரத்துறையோடு கூடுதலாக சுகாதாரத்துறையும் மாண்டவியாவிடம் வழங்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் 2-வது அலையை முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்ஸவர்த்தன் சரியாக கையாளவில்லை என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டின. நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் 2-வது அலையின்போது மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது, அதைச் சமாளிக்க ரயில்வே துறை மூலம் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் உருவாக்கப்பட்டு பல்வேறு மாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டது.
இந்த விவகாரத்தை கையில் எடுத்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. இது மத்தியில் ஆளும் பிரதமர் மோடி அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, சுகாதாரத்துறைக்கு புதிய அமைச்சராக மன்சுக் மாண்டவியா நியமிக்கப்பட்டுள்ளார். கரோனா 2-வது அலை நாட்டில் முடிவடையாத நிலையில், ஆகஸ்ட் 2-வது வாரத்தில் 3-வது அலை உருவாக வாய்ப்புள்ளது என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இதை எவ்வாறு புதிய சுகாதாரத்துறை அமைச்சர் மாண்டவியா சமாளிக்கப் போகிறார் என்பது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறையும் நிலவுகிறது, ஏராளமான தடுப்பூசி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குதல், தடுப்பூசி தயாரிப்பை விரைவுப்படுத்துதல் போன்றவையும் விரைவுப்படுத்தப்பட உள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில் அந்த இலக்கை எவ்வாறு எட்டுவதற்கு புதிய சுகதாரத்துறை அமைச்சர் திட்டமிட்டுள்ளார் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.
குஜராத்தின் சவுராஷ்டிரா மண்டலத்தைச் சேர்ந்த மாண்டவியா கடந்த 2016ம் ஆண்டிலிருந்து பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இருந்து வருகிறார். முதலில் மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம், கப்பல், உரத்துறை, ரசாயனம் ஆகிய துறையில் மாண்டவியாவுக்கு இடம் வழங்கப்பட்டது. அதன்பின், 2019-ல் ரசாயனம் மற்றும் உரத்துறையில் தனி அமைச்சகப் பொறுப்பும், கப்பல் மற்றும் நீர்வழிப்போக்குவரத்தின் பொறுப்பும் வழங்கப்பட்டது.
கடந்த 1972-ம் ஆண்டு, ஜூலை 1-ம் தேதி பாவ்நகர் மாவட்டம், ஹனூல் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் மாண்டவியா பிறந்தார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் அமைப்பான ஏபிவிபி பிரிவில் இருந்த மாண்டவியா, பின்னர் பாரதிய யுவ மோர்ச்சாவிலும், அதன்பின் பாஜகவிலும் சேர்ந்தார். 2012ம் ஆண்டு மாநிலங்களவை எம்.பியாகவும், 2018ல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கால்நடை மருத்துவம் மற்றும் முதுகலை அரசியல்அறிவியல் பயின்ற மாண்டவியா, கடந்த 2002ம் ஆண்டு பலிதானா தொகுதியில் எம்எல்ஏவாகவும் வெற்றி பெற்றார். எம்எல்ஏவாக இருந்தபோது, குஜராத் மாநிலத்தில் பெண்கள் கல்வி மற்றும் போதை மருந்து எதிர்ப்பு ஆகியவற்றை வலியுறுத்தி நீண்ட நடைபயணத்தை மாண்டவியா நடத்தியவர்.
மத்திய ரசாயனம், உரம், மருந்துத்துறை அமைச்சராக இருக்கும் மாண்டவியா, நாடுமுழுவதும் 5,100 ஜன்அவுஷதி மருந்துக் கடைகளை திறந்த பெருமைக்குரியவர். 850 வகை மருந்துகளை மக்கள் குறைந்த விலையில் வாங்கவும், இதய அறுவை சிகிச்சைக்கான ஸ்டென்ட், மூட்டு மாற்று சிகிச்சைக்கான கருவிகள், மருந்துகளை விலை குறைவாக கிடைக்கச் செய்த பெருமைக்குரியவர்.
பெண்களுக்கு குறைந்தவிலையில் 10 கோடி நாப்கின்கள் வழங்க ஜன் அவுஷதி கடைகள் மூலம் நடவடிக்கை எடுத்து யுனிசெப் பாராட்டை மாண்டவியா பெற்றார்.
டிஏபி உரம், யூரியா அல்லாத உரங்கள் விலையை கட்டுப்படுத்த வேண்டியது, விவசாயிகளுக்கு நேரடியாக மானியம் கிடைக்கச் செய்ய வைப்பது, மோசமான நிலையில் இருந்த யூரியா தொழிற்சாலையை மேம்படுத்த திட்டமிடல், பயிர்களுக்குத் தேவையான உரங்கள் இறக்குமதியைக் குறைக்க வேண்டியது போன்றவற்றை மாண்டவியா உடனடியாக செய்ய வேண்டிய நிலையில் உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT