Published : 08 Jul 2021 09:13 AM
Last Updated : 08 Jul 2021 09:13 AM
உத்தரப்பிரதேசத்தில் 2022ம் ஆண்டு நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில், அந்த மாநிலத்தைச் சேர்ந்த 7 எம்.பி.க்களுக்கு மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 7 எம்.பி.க்கள் மத்திய அமைச்சர்களாக நேற்று குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவி ஏற்றுக்கொண்டனர். இதில் ஓபிசி வகுப்பில் 3 அமைச்சர்கள், பட்டியலினத்தைச் சேர்ந்த பிரிவில் 3 அமைச்சர்களும், பிராமண வகுப்புக்கு ஒரு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் மிர்சாபூர் தொகுதி எம்.பி. அணுப்பிரியா படேல், மகாராஜாகாஞ் தொகுதி எம்.பி. பங்கஜ் சவுத்ரி இருவரும் கிழக்கு உ.பி.யைச் சேர்ந்தவர்கள். மேற்கு உ.பியில் இருந்து ஆக்ரோ தொகுதி எம்.பி. பாகேல், பதுவான் தொகுதி மாநிலங்களவை எம்.பி. வி.எல்வர்மா ஆகியோர் அமைச்சர்களாகியுள்ளனர்.
இதில் பண்டேல்கன்ட் பகுதியைச் சேர்ந்த ஜலான் தொகுதி எம்.பி. பானு பிரதாப் சிங், கிரி தொகுதி எம்.பி. அஜெய் குமார், மோகன்லால்கஞ்ச் தொகுதி எம்.பி. கவுசால் கிஷோர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதில் அணுப்பிரியா படேல் மட்டும் அப்னா தளம் கட்சியைச் சேர்ந்தவர். மற்ற 6 பேரும் பாஜக எம்.பி.க்கள் ஆவர்.
உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. 400க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்துவிட்டாலே மத்தியில் ஆள்பவர் யார் என்பதை முடிவு செய்துவிட முடியும் அளவுக்கு வலிமையான மாநிலாமாகும்.
இந்த மாநிலத்தில் தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியைத் தக்கவைக்கும் முயற்சியி்ல் ஆளும் பாஜக அரசு ஈடுபட்டுள்ளது.
அடுத்த ஆண்டு நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு இந்த மாநிலத்தைச் சேர்ந்த 7 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் 50 சதவீதம் பேர் ஓபிசி பிரிவினர் இருப்பதால், அந்த வகுப்பைச் சேர்ந்த அணுப்பிரியா படேல், பங்கஜ் சவுத்ரி, பிஎல் வர்மா ஆகியோருக்கும், 20 சதவீதம் இருக்கும் பட்டியலின வகுப்பினரின் வாக்குகளைக் கவர கவுசால் கிஷோர், பாணு பிரதாப் சிங் வர்மா, எஸ்.பி.சிங் பாகேல் ஆகியோருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
பிராமண வகுப்பினரின் வாக்குகளைப் பெற அஜெய் குமாருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸிலிருந்து பிரிந்துவந்து பாஜகவில் சேர்ந்த ஜிதின் பிரசாதாவுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில் அஜெய் குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அணுப்பிரியா படேலுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு நிஷாத் கட்சி எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. நிஷாத் கட்சியின் தலைவர் சஞ்சய் நிஷாத் கூறுகையில் “ நிஷாத் சமூகத்தைச் சேர்ந்த எம்.பி. பிரவீண் நிஷாத்துக்கு ஏன் அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.
பாஜகவை விட்டு நிஷாத் சமூகம் வெகுதூரம் விலகிவிட்டது. தொடர்ந்து இந்த தவறைச் செய்தால், சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கடும் விளைவுகளைச்சந்திக்க நேரிடும். அணுப்பரியாவுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் போது, பிரவீணுக்கு வழங்கக்கூடாதா. பிரவீண் முதலில் கோரக்பூர் தொகுதியில் வென்று, அதன்பின், சாந்த் கபீர் நகர் தொகுதியிலும் வென்றார். இரு தொகுதிகளுமே கடினமானவை, அதில் வென்றுள்ளோம்” எனத் தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT