Published : 07 Jul 2021 05:50 PM
Last Updated : 07 Jul 2021 05:50 PM
மத்திய சட்டத்துறை அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், தகவல் ஒளிபரபுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
மத்திய அமைச்சரவை இன்று மாலை 6 மணிக்கு விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில் புதிய அமைச்சர்களாக மொத்தம் 43 பேர் பதவியேற்கவுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு பதவியேற்ற பிறகு, மத்திய அமைச்சரவையில் இதுவரை மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. முதன்முறையாக மத்திய அமைச்சரவை விரிவாக்கம் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இறுதி நிமிடம் வரை நீளும் பரபரப்பு ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் டெல்லியின் பக்கம் திரிப்பியுள்ளது.
மத்திய அமைச்சரவையில் தற்போது 28 காலி இடங்கள் இருக்கிறது. தற்போது அமைச்சரவையில் பிரதமர் மோடியைத் தவிர்த்து 21 கேபினட் அமைச்சர்களும், 9 இணை அமைச்சர்களும் (தனிப் பொறுப்பு), 23 இணை அமைச்சர்களும் உள்ளனர்.
மொத்தம் 43 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர். இவர்களில் பலர் புதுமுகங்களாகும். இளைஞர்கள் பலருக்கு வாய்ப்பளிக்கப்படவுள்ளது. முன்னாள் முதல்வர்கள் 4 பேர், முன்னாள் மாநில அமைச்சர்கள் 18 பேர், வழக்கறிஞர்கள் 13 பேர், மருத்துவர்கள் 6 பேர், இன்ஜினியர்கள் 5 பேர், முன்னாள் அரசு அதிகாரிகள் 7 பேர் இடம்பெறுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சரவை விரிவாக்கத்திற்காக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்குவார் மற்றும் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆகியோர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தனும் ராஜினாமா செய்துள்ளார்.
இந்நிலையில், அமைச்சரவை விரிவாக்கத்துக்கு அரை மணி நேரத்துக்கு முன்னதாக ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். மொத்தம் 12 அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். அவர்கள் அனைவரின் ராஜினாமா கடிதமும் ஏற்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT