Published : 06 Jul 2021 10:41 AM
Last Updated : 06 Jul 2021 10:41 AM
2030-ம் ஆண்டுக்குள் எந்த விபத்து இறப்புகளும் ஏற்படாத நிலையை உருவாக்க வேண்டும் என்பதுதான் இலக்கு என சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
வாகன விபத்து பாதுகாப்பு பற்றிய காணொலி கருத்தரங்கை தொடங்கி வைத்து அமைச்சர் நிதின்கட்கரி பேசியதாவது:
இந்தியா மற்றும் இதர வளரும் நாடுகளில் அதிகளவிலான சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் 1.5 லட்சம் பேர் இறக்கின்றனர். இது கரோனா மரணங்களை விட அதிகம்.
சாலை விபத்து இறப்புக்களை 50 சதவீதம் குறைக்க வேண்டும் எனவும், 2030ம் ஆண்டுக்குள் எந்த விபத்து மற்றும் இறப்புகளும் ஏற்படாத நிலையை உருவாக்க வேண்டும் என்பதுதான் எனது தொலைநோக்கு. சாலை விபத்துக்களில் 60 சதவீத மரணங்களில் சிக்குபவர்கள் இருசக்கர வாகன ஓட்டிகள். மோட்டார் சைக்கிள் போக்குவரத்து பாதுகாப்புதான் இப்போதைய தேவை.
உலகளவில் வாகன பொறியியல் தொழில்நுட்பம் மற்றும் சாலை பொறியியல் தொழில்நுட்பம் மிகப் பெரியளவில் மேம்பட்டுள்ளது. ஓட்டுநர்களுக்கான சிறந்த பயிற்சி, மேம்பட்ட பயிற்சி மையங்கள் ஆகியவை முக்கியம்.
நல்ல சாலைகளை உருவாக்கி, சாலை கட்டமைப்பை மேம்படுத்துவது எனது தார்மீக பொறுப்பு. சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நமது இலக்குகளை அடையவும், அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு அவசியம்.
இவ்வாறு மத்திய அமைச்சர் நிதின்கட்கரி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT