Last Updated : 06 Jul, 2021 07:53 AM

1  

Published : 06 Jul 2021 07:53 AM
Last Updated : 06 Jul 2021 07:53 AM

கல்வியாண்டு இரண்டாகப் பிரிப்பு: சிபிஎஸ்இ 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர், மார்ச்சில் இரு பருவத் தேர்வு

கோப்புப்படம்

புதுடெல்லி


கரோனா வைரஸ் பரவலையடுத்து, 2021-22ம் கல்வியாண்டை சிபிஎஸ்இ வாரியம் இரண்டாகப் பிரித்துள்ளது. இதன்படி 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு, நவம்பர், மற்றும் மார்ச் மாதங்களில் இரு பருவத் தேர்வுகளை நடத்தி மதிப்பீடுகளை வழங்கும் முறையை சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

இதன்படி, 2021, நவம்பர்-டிசம்பர் மாதங்களில் ஒருபருவத் தேர்வும், 2022ம் ஆண்டு மார்ச்-ஏப்ரல் மாதங்களில் 2-வது பருவத் தேர்வும் நடத்தி தேர்வு முடிவுகள் அறிவிக்பபடும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டும் சிபிஎஸ்இ 10,12்ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முழுமையாக நடத்தப்படவில்லை, இந்த ஆண்டும் தேர்வு நடத்தாமல் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, மாணவர்களுக்கு மதிப்பெண்களை வழங்கும் முறை குறித்து மாற்று வழிகளை பெற்றோர், தனியார் பள்ளிகள், கல்வியாளர்கள் ஆகியோருடன் கலந்தாய்வு நடத்தி, புதிய சிறப்பு மதிப்பீடு திட்டத்தை சிபிஎஸ்இ வாரியம் அறிவித்துள்ளது.

இது குறித்து சிபிஎஸ்இ வாரியத்தின் இயக்குநர் ஜோஸப் இமாணுவேல் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

2021-22ம் ஆண்டு கல்வியாண்டு இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பிரிவுத் தேர்வு வரும் நவம்பர்-டிசம்பர் மாதங்களில் நடத்தப்படும், 2-வது பருவத் தேர்வு மார்ச்-ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படும். இந்த இரு பருவத்துக்கான பாடப்பிரிவுகள் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டு இந்த மாதத்தில் அறிவிக்கப்படும்.

அதுமட்டுமல்லாமல் வழக்கம் போல் மாணவர்களுக்கு வழங்கப்படும் இன்டர்னல் மதிப்பீடு, செய்முறைத் தேர்வு போன்றவை வழக்கம் போல் நம்பகத்தன்மையாக நடத்தப்பட்டு அந்த மதிப்பெண்களும் கருத்தில் கொள்ளப்படும்.

நவம்பர்-டிசம்பர் மாதங்களில் முதல்பருவத் தேர்வு 10மற்றும் 12-ம் வகுப்பு நடத்தப்படும். நாட்டில் நிலவும் சூழலுக்கு ஏற்ப 4 முதல் 8 வாரங்களில் இந்த தேர்வு நடத்தப்படும்.

இந்த முதல்பருவத் தேர்வில் கேள்விகள் அனைத்தும் சரியான விடையை மட்டும் தேர்ந்தெடுத்து எழுதுவது போன்று (Multiple Choice Questions (MCQ)) அமைக்கப்பட்டிருக்கும். இதற்காக மாணவர்களுக்கு ஓஎம்ஆர் ஷீட் வழங்கப்படும். இந்த பதில் அளிக்கும் ஷீட்டில் மாணவர்கள் சரியான பதிலை மட்டும் குறிப்பிட்டால் போதுமானது.

இந்த தேர்வு 90 நிமிடங்கள் மட்டுமே நடத்தப்படும். இந்தத் தேர்வுக்கான கேள்வித்தாள்கள் அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும்.

சிபிஎஸ்இ வாரியத்தால் நியமிக்கப்படும் தேர்வு கண்காணிப்பாளர்கள் பார்வையில் தேர்வுகள் நடத்தப்படும். மாணவர்கள் ஓஎம்ஆர் ஷீட்டில் பதிலை குறிப்பிட வேண்டும், அந்த ஷீட் சிபிஎஸ்இ தளத்தில் பதிவேற்றப்பட்டு, மதிப்பீடு செய்யப்பட்டு, மதிப்பெண்கள் அன்றைய தினமே அறிவிக்கப்படும்.


2-வது பருவத் தேர்வுக்கான பாடப்பிரிவுகள் தனியாக அறிவிக்கப்படும். 2022ஆம் ஆண்டு மார்ச்-ஏப்ரல் மாதத்தில் 2-வது பருவத் தேர்வு நடத்தப்படும். 2 மணிநேரம் நடத்தப்படும் இந்தத் தேர்வில் மாணவர்கள் குறுகிய விடை, நீண்ட விடை அளிக்கும் விதத்தில் கேள்விகள் கேட்கப்படும்.

ஒருவேளை 2 மணிநேரம் தேர்வு நடத்தும் அளவுக்கு சூழல் இல்லாமல் கரோனா பாதிப்பு இருந்தால், தேர்வு 90 நிமிடங்கள் மட்டும் சரியான விடையை தேர்ந்தெடுக்கும் வகையில் முதல்பருவத் தேர்வு போன்று நடத்தப்படும்.

கரோனா பாதிப்பு குறைந்திருந்தால், மாணவர்கள் பள்ளிக்கோ அல்லது தேர்வு மையத்துக்கோ வந்து தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். ஒருவேளை நவம்பர்-டிசம்பர் மாதத்தில் நடத்தப்படும் முதல்பருவத் தேர்வின் போதும் பள்ளிகள் திறக்க முடியாத சூழல் இருந்து, 2-வது பருவத்தின் போது பள்ளிகள், தேர்வு மையங்கள் திறக்கும் சூழல் இருந்தால், முதல்பருவத் தேர்வு ஆன்-லைன் மூலமோ அல்லது ஆஃப் லைன் மூலமோ தேர்வு நடத்தப்பட்டு மதிப்பெண் வழங்கப்படும்.

அதேபோல நவம்பர்-டிசம்பர் மாதத்தில் நடக்கும் முதல் பருவத் தேர்வு பள்ளிகளிலும், தேர்வு மையங்களிலும் நடத்தப்பட்டு, 2022-மார்ச், ஏப்ரல் மாதத்தில் பள்ளிகளிலும், தேர்வு மையத்திலும் 2-வது பருவத் தேர்வு நடத்த இயலாத சூழல் இருந்தால், முதல் பருவத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

ஒருவேளை 2021-22ம் கல்வியாண்டில் பள்ளிகளைத் திறக்க முடியாத சூழல் ஏற்பட்டால், முதல்பருவம் மற்றும் 2-வது பருவத் தேர்வுகளை மாணவர்கள் வீட்டியல் இருந்தவாறே எழுதலாம். மாணவர்களுக்கான மதிப்பெண்கள் வழங்குவது தேர்வின் அடிப்படையிலும், பள்ளியின் உள்மதிப்பீடு ஆகியவற்றின் அடிப்படையில் கருத்தில் கொண்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இரு பருவத்துக்கும் பாடப்பிரிவுகள் பிரித்து வழங்கப்படும். உள்மதிப்பீடு, செய்முறைத் தேர்வு, ப்ராஜெக்ட் ஆகியவை வழிகாட்டுதலின்படி நம்பகத்தன்மையான முறையில் நடத்தப்பட்டு அந்த மதிப்பெண்களும் எடுத்துக்கொள்ளப்படும்.

இவ்வாறு இமாணுவேல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x