Published : 09 Feb 2016 04:24 PM
Last Updated : 09 Feb 2016 04:24 PM
சத்தீஸ்கரில் நீதிபதி ஒருவரின் தோட்டத்தில் மேயந்த வெள்ளாடு, அதன் உரிமையாளருடன் நேற்று முன்தினம் (திங்கள்கிழமை) கைது செய்யப்பட்டது. இந்த ஆடும், அதன் உரிமையாளரும் நேற்று (செவ்வாய்கிழமை) ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 350 கி.மீ. தொலைவில் உள்ளது கோரியா. இங்குள்ள நீதிபதி ஹேமந்த் ரத்ரேவின் தோட்டக்காரர் அளித்த புகாரின் பேரில், அப்துல் ஹசன் என்பவர் அவர் வளர்த்து வரும் வெள்ளாட்டுடன் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஆர்.பி.வத்சவா கூறும்போது, “நீதிபதி பங்களாவில் உள்ள இரும்புக் கதவை இந்த வெள்ளாடு தாண்டிக் குதித்து தோட்டத்தில் மேய்ந்து வருகிறது. ஆட்டின் உரிமையாளரிடம் தோட்டக்காரர் பலமுறை எச்சரித்தும் இது தடுக்கப்படவில்லை. எனவே தோட்டக்காரர் அளித்த புகாரின் பேரில் அப்துல் ஹசனை அவரது ஆட்டுடன் கைது செய்தோம்” என்றார்.
பெயர் தெரியாத ஆடு மற்றும் இதன் உரிமையாளர் அப்துல் ஹசன் என்று போலீஸார் தங்கள் வழக்கில் கூறியுள்ளனர். அத்துமீறி நுழைதல், உடைமைகளுக்கு சேதம் விளைவித்தல் என 2 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் வகையிலான குற்றச்சாட்டுகள் அப்துல் ஹசன் மற்றும் அவரது ஆடு மீது சுமத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் அப்துல் ஹசன் தனது ஆட்டுடன் நேற்று கோரியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டார். நீதிமன்றம் ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT