Published : 05 Jul 2021 05:26 PM
Last Updated : 05 Jul 2021 05:26 PM
குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகனும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.யுமான அபிஜித் முகர்ஜி இன்று மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
மேற்கு வங்கத்தின் ஜாங்கிபூர் தொகுதியின் காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யாக அபிஜித் முகர்ஜி இருந்தார். நல்ஹாட்டி தொகுதி எம்எல்ஏவாகவும் முகர்ஜி இருந்துள்ளார்.
முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள ஜாங்கிபூர் தொகுதியில் பிரணாப் முகர்ஜி இரு முறை எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2012-ம் ஆண்டு பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அந்தத் தொகுதி காலியானது.
அந்தத் தொகுதியில் அவரின் மகன் அபிஜித் முகர்ஜி போட்டியிட்டு வென்றார். அதன்பின் 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் அபிஜித் முகர்ஜி வெற்றி பெற்று, 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் ரஹ்மானிடம் பானர்ஜி தோல்வி அடைந்தார்.
சமீபத்தில் நடந்த முடிந்த மே. வங்கச் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு இடம் கூட கைப்பற்றவில்லை. இதையடுத்து அபிஜித் முகர்ஜி, திரிணமூல் காங்கிரஸ் அல்லது பாஜகவுக்குச் செல்வார் எனத் தகவல்கள் வெளியாகின.
அதற்கு ஏற்ப ராகுல் காந்திக்கு நெருக்கமாக இருந்த ஜிதின் பிரசாதா, பாஜகவில் இணைந்ததையடுத்து, முகர்ஜியும் பாஜகவுக்குச் செல்வார் என நம்பப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாரா வகையில் திரிணமூல் காங்கிரஸில் அபிஜித் முகர்ஜி இன்று இணைந்துள்ளார்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தபின், அபிஜித் முகர்ஜி அளித்த பேட்டியில், “சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜி வகுப்புவாத, மதவாத சக்திகளைத் தடுத்து நிறுத்திய விதம் என்னைக் கவர்ந்தது. குறிப்பாக பாஜக அலையை நிறுத்திவிட்டார், அடுத்துவரும் ஆண்டுகளில் இதேபோன்று மற்றவர்களின் உதவியுடன் நாடு முழுவதும் பாஜக அலையை மம்தா நிறுத்துவார் என நம்புகிறேன்’’ எனத் தெரிவித்தார்.
சமீபத்தில் காங்கிரஸில் இருந்து ஜோதிர் ஆதித்யா சிந்தியா பாஜகவில் இணைந்தபின், ஜிதின் பிரசாதாவும் இணைந்தது காங்கிரஸ் கட்சியை உலுக்கியது. இப்போது, காங்கிரஸிலிருந்து மூத்த தலைவர் முகர்ஜியும் விலகியுள்ளது மேலும் அந்தக் கட்சியை பலவீனமாக்கியுள்ளது.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின் அங்கு அரசியல் மாற்றங்கள் நடந்து வருகின்றன. சமீபத்தில் திரிணமூல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இருந்து வந்த முகுல் ராய் அங்கிருந்து விலகி மீண்டும் மம்தா பானர்ஜியிடம் அடைக்கலமானார். அவரின் மகன் சுப்ரான்சுவும் திரிணமூல் காங்கிரஸில் சேர்ந்தார். இப்போது அபிஜித் முகர்ஜியும் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT