Published : 05 Jul 2021 04:45 PM
Last Updated : 05 Jul 2021 04:45 PM
மகாராஷ்டிர சட்டப்ரேரவையில் சபாநாயகரைத் தாக்க முயன்ற, தகாத வார்த்தைகளைப் பேசிய பாஜகவைச் சேர்ந்த 12 எம்எல்ஏக்களை ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
இதையடுத்து, சட்டப்பேரவையில் பேரவை விவகாரத்துறை அமைச்சர் அனில் பாரப் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர்.
மகாராஷ்டிர சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்றே கடும் அமளி, கூச்சலுடன் கூட்டம் தொடங்கியது. ஓபிசி இட ஒதுக்கீடு குறித்து சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏக்கள் கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.
ஆனால், பாஜக எம்எல்ஏக்களுக்கு உரிய நேரத்தில் வாய்ப்பளிக்கிறேன், அமைதியாக அமரும்படி சபாநாயகர் பாஸ்கர் ஜாதவ் கேட்டுக்கொண்டார்.
ஆனால், பாஜக எம்எல்ஏக்கள் சபாநாயகர் பேச்சைக் கேட்காமல் அவர் இருக்கை அருகே சென்று கூச்சலிட்டனர். இதில் சிலர் அவரைத் தாக்கவும் முயன்றதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இதையடுத்து சபாநாயகர் பாஸ்கர் ஜாதவ், வரம்பு மீறிச் செயல்பட்ட 12 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
சபாநாயகர் பாஸ்கர் ஜாதவ் அளித்த பேட்டியில், “எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் என் அருகே வந்து தகாத வார்த்தைகளால் பேசினர். இதை எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், மூத்த தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் பார்த்துக்கொண்டிருந்தனர். சில எம்எல்ஏக்கள் என்னைத் தாக்க முயன்றனர்” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, பாஜகவைச் சேர்ந்த 12 எம்எல்ஏக்களையும் ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்வது தொடர்பாக தீர்மானத்தைச் சட்டப்பேரவை விவகாரத்துறை அமைச்சர் கொண்டுவந்து, நிறைவேற்றினார். இதையடுத்து, பாஜகவைச் சேர்ந்த 12 எம்எல்ஏக்களும் ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதன்படி, பாஜக எம்எல்ஏக்கள் சஞ்சய் குடே, ஆஷ்ஸ் ஷெல்லர், அபிமன்யு பவார், கிரிஷ் மகாஜன், அடுல் பாட்கால்கர், பராக் அலாவனி, ஹரிஷ் பிம்பாலே, யோகேஷ் சாகர், ஜெய் குமார் ராவத், நாராயண் குச்சே, ராம் சத்புதே, பண்டி பாங்டியா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த சஸ்பெண்ட் உத்தரவையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். அப்போது பட்னாவிஸ் கூறுகையில், “பாஜக எம்எல்ஏக்கள் மீது பொய்யான குற்றச்சாட்டு கூறப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள். எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் எண்ணிக்கையைக் குறைக்க எடுக்கும் முயற்சி இது.
ஏனென்றால், உள்ளாட்சிப் பதவிகளில் ஓபிசி இட ஒதுக்கீட்டில் அரசின் பொய்களை வெளிக்கொண்டு வந்துவிட்டோம். அவையை நடத்திய அதிகாரியை பாஜக எம்எல்ஏக்கள் அவமதிக்கவில்லை. சிவசேனா எம்எல்ஏக்கள்தான் அவதூறாகப் பேசினர். எங்கள் எம்எல்ஏக்கள் சபாநாயகர் இருக்கைக்கு அருகே செல்லவில்லை” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT