Published : 05 Jul 2021 03:38 PM
Last Updated : 05 Jul 2021 03:38 PM
கரோனா வைரஸுக்கு எதிராக அலோபதி மருத்துவம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்த பாபா ராம்தேவ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி ராம்தேவ் தாக்கல் செய்த மனுவின் விசாரணை 12ம் தேதிக்கு நடக்கும் என உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.
கரோனா சிகிச்சைக்கு பயன்படும் அலோபதி மருத்துவம் குறித்து பாபா ராம்தேவ் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் இந்திய மருத்துவ கூட்டமைப்பு அவர் மீது கிரிமினல் புகார் அளித்தது.
இதைத்தொடர்ந்து பாட்னா, ராய்பூரில் பாபா ராம்தேவ் மீது பல முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன. பாபா ராம்தேவ் மீது பேரிடர் மேலாண்மைச் சட்டத்தில் வழக்கு, ஐபிசி பிரிவு 188, பிரிவு 269, பிரிவு 504 ஆகியவற்றில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மேலும், பாபா ராம்தேவ் கருத்துக்கு தேசிய அளவில் இந்திய மருத்துவக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்து, போராட்டங்களை நடத்தியது. இந்த சூழலில் தன் மீது தொடரப்பட்ட வழக்குகளை டெல்லி மாற்ற வேண்டும், விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரி பாபா ராம்தேவ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று தலைைம நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் ஏ.எஸ்.போன்னா, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் முன்நிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு கூறுகையில், “ இந்த வழக்கில் மனுதாரர் பாபா ராம்தேவ் உண்மையில் என்ன பேசினார் என்பது தொடர்பான ஆதாரங்கள், வீடியோக்களை தாக்கல் செய்ய வழக்கறிஞரிடம் உத்தரவிட்டிருந்தோம். இந்த ஆதாரங்கள் அனைத்தும் நேற்று இரவு 11 மணிக்குத்தான் கிடைத்தன. ஆதலால் இந்த வழக்கை ஒருவாரம் கழித்து வரும் 12-ம் தேதி விசாரணைக்கு எடுக்கிறோம்” எனத் தெரிவித்தனர்.
ராம் தேவ் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகல் ரோஹத்கி கடந்த வாரம் ஆஜராகினார். அப்போது தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு, “ உண்மையில் பாபா ராம்தேவ் என்ன பேசினார், நீங்கள் எதையும் முழுமையாக எங்களிடம் தெரிவிக்கவில்லையே. அவர் பேசிய முழு விவரத்தையும் எங்களிடம் தாக்கல் செய்யுங்கள்” எனத் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் தங்களையும் ஒரு மனுதாரராகச் சேர்க்கக் கோரி டெல்லியில் உள்ள இந்திய மருத்துவக் கூட்டமைப்பும் மனுத்தாக்கல் செய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT