Published : 05 Jul 2021 03:15 PM
Last Updated : 05 Jul 2021 03:15 PM
2015 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 66-ஏ இன்னமும் பயன்படுத்தப்பட்டு, பல்வேறு தரப்பினர் மீது வழக்குத்தாக்கல் செய்யப்படுவது அதிர்ச்சியளிக்கிறது என்று உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
2015-ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட தகவல்தொழில்நுட்பச் சட்டம் 66-ஏ பிரிவில் ஒருவர் கைது செய்யப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டுகள் வரை சிறையும், அபராதமும் விதிக்க முடியும்.
கடந்த 2012ஆம் ஆண்டில் சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்ரே மறைவுக்கு மும்பையில் பந்த் கடைபிடிக்கப்பட்டது. இது குறித்து தானே மாவட்டத்தைச் சேர்ந்த ஷாகின் தாடா, ரேனு ஸ்ரீனிவாசன் ஆகிய இரு பெண்களும் சமூக வலைத்தளத்தில் கருத்துத் தெரிவித்தனர். இந்த கருத்தையடுத்து, தகவல் தொழில்நுட்பச் சட்டம் 66ஏ பிரிவில் ஷாகின் தாடா, ரேணு ஸ்ரீனிவாசன் இருவரையும் மும்பை போலீஸார் கைது செய்தனர்.
இந்த கைதை எதிர்த்தும், தகவல் தொழில்நுட்பச்சட்டத்தில் திருத்தம் செய்யக் கோரியும் சட்டக்கல்லூரி மாணவரி ஸ்ரேயா சிங்கால் உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அடிப்படை உரிமைகளுக்கு விரோதமாக சட்டப்பரிவு இருப்பதாகக் கூறி ஐடி சட்டத்தில் 66-ஏ பிரிவை ரத்து செய்து 2015ம் ஆண்டு மார்ச் 24-ம் தேதி தீர்ப்பளித்தது.
இந்த சட்டத்தின் கீழ் மக்கள் யாரும் தேவையில்லாமல் கைது செய்யக்கூடாது என்று உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், தீர்ப்பின் நகலை நாட்டில் உள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும், போலீஸ் நிலையங்களுக்கும், அனைத்து உயர் நீதிமன்றங்கள்,மாவட்ட, விசாரணை நீதிமன்றங்களுக்கும் அனுப்பி வைத்து அதைபின்பற்ற உத்தரவிட்டது.
இந்நிலையில் ரத்து செய்யப்பட்ட தகவல் தொழில்நுட்பச் சட்டம் 66-ஏ பிரிவில் நூற்றுக்கணக்கில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட பிரிவில் எவ்வாறு வழக்குப் பதிவு செய்ய முடியும் எனக் கூறி பியுசிஎல் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்குப் பதிவு செய்தது.
மேலும், ரத்துச் செய்யப்பட்ட சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்த போலீஸ் அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரோஹின்டன் ஃபாலி நாரிமன், கே.எம்.ஜோஸப், பி.ஆர் காவே ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. பியுசிஎல் சார்பில் வழக்கறிஞர் சஞ்சய் பாரிக் ஆஜராகினார். மத்திய அரசு தரப்பில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆஜராகினார்.
அப்போது, மனுதாரர் வழக்கறிஞர் சஞ்சய் பாரிக் வாதிடுகையில், “ கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் 24-ம் தேதி உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 66ஏ இன்னும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்தப் பிரிவில் நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரத்து செய்யப்பட்ட பிரிவில் எவ்வாறு வழக்குப்பதிவு செய்ய முடியும், அவ்வாறு வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதைக் கேட்ட நீதிபதிகள் ஃபாலி நாரிமன் அமர்வு “ என்னது 2015-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட சட்டப்பிரிவில் இன்னும் வழக்குப்பதிவு செய்யப்படுகிறதா. கேட்பதற்கே கொடுமையாக இருக்கிறது. ஏன் இவ்வாறு தொடர்ந்து நடக்கிறது. ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். கவலைப்படாதீர்கள்.நாங்கள் விரைவில் முடிவு எடுக்கிறோம். இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்புகிறோம் ” எனத் தெரிவி்த்தார்.
அப்போது மனுதாரர் வழக்கறிஞர் பாரிக் “ இந்தச் சட்டப்பரிவை ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. இருப்பினும் இந்தப் பிரிவில் வழக்குப்பதிவு செய்வதால் ஏராளமான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்” எனத் தெரிவித்தார்
அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் பேசுகையில் “ உச்ச நீதிமன்றத்தின் அமர்வு கடந்த 2015-ம் ஆண்டு ரத்து செய்தபின்பும் ஐடி சட்டம் 66ஏ பிரிவு நடைமுறையில் இருக்கிறது” எனத் தெரிவித்தார்
இதைக் கேட்ட நீதிபதிகள்அமர்வு “ இந்த விவகாரம் அதிர்ச்சிக் குரியதாக இருக்கிறது. இதற்கு மத்திய அரசு பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும். 2 வாரங்களுக்குப்பின் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கிறோம்” எனத் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT