Published : 05 Jul 2021 11:21 AM
Last Updated : 05 Jul 2021 11:21 AM
சிவசேனா பாஜகவின் எதிரி அல்ல, நண்பர் தான் என்று மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவில் முதல்வர் பதவி யாருக்கு என்ற போட்டியில் பாஜக, சிவசேனா கூட்டணி முறிந்தது. தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆதரவுடன் சிவசேனா ஆட்சி அமைத்தது.
இந்நிலையில், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை அண்மையில் சந்தித்துப் பேசினார். இந்த சூழ்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்தியக் குடியரசு கட்சியின் தலைவரும் மத்திய இணை அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே கூறும்போது, " மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா இடையேயான உறவை புதுப்பிக்க வேண்டிய தருணம் வந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து பாஜக மாநில தலைவர் தேவேந்திர பட்னாவிஸிடம் பேசியுள்ளேன். மேலும் பிரதமர் மோடியுடனான சந்திப்பிலும் இதுகுறித்து விவாதிக்க உள்ளேன்" என்றார்.
இதனைத் தொடர்ந்து பட்னாவிஸ் சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். இதனால் பாஜக-சிவசேனா கூட்டணி மீண்டும் உருவாகிறதா என்ற கேள்வி எழுந்தது.
இதுபற்றி பட்னாவிஸ் கூறியதாவது:
"கடந்த 2019 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவும், சிவசேனாவும் இணைந்து போட்டியிட்டன. ஆனால் தேர்தல்களுக்குப் பிறகு, நாங்கள் யாருக்கு எதிராக போட்டியிட்டோமோ அந்த நபர்களுடன் கைகோர்த்து சிவசேனா ஆட்சியமைத்தது.
அரசியலில் நடைமுறையில் உள்ள சூழ்நிலைகளின்படி முடிவுகள் எடுக்கப்படுகின்றன. சிவசேனா பாஜகவின் எதிரி அல்ல. நண்பர் தான். சில விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும். அரசியலில் நடக்காது என்று எதுவும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார். வழக்கமாக சிவசேனாவை கடுமையாக விமர்சித்து வரும் பட்னாவிஸ் திடீரென புகழ்ந்து பேசியுள்ளதால் மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக- சிவசேனா கூட்டணி அமைகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மகாராஷ்டிர பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் அண்மையில் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, ''ஒரு நிகழ்ச்சியில் வனத்தில் பணிபுரியும் தன்னார்வலரைச் சந்தித்தேன். அவர் புலியின் படம் அடங்கிய புகைப்பட ஆல்பத்தைப் பரிசாகக் கொடுத்தார். அவருக்கு பதில் கூறும் விதமாக, 'இது அருமையான பரிசு. புலிகளுடன் நாங்கள் எப்போதுமே நண்பர்களாக இருப்போம்' என்று கூறியிருந்தேன்.
எனினும் சிவசேனாவின் சின்னம் புலி என்பதால், ஊடக நண்பர்கள் அந்தக் கருத்தை சிவசேனாவுடன் பாஜக மீண்டும் நட்பாக முயல்வதாகத் தெரிவித்துவிட்டனர். நாங்கள் எப்போழுதுமே நிறையப் பேருடன் நண்பர்களாக முயற்சி செய்வது உண்மைதான். ஆனால், நாங்கள் காட்டில் இருக்கும் புலிகளுடனே நட்பாக விரும்புவோம். கூண்டுப் புலியுடன் அல்ல.’’ எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT