Last Updated : 04 Jul, 2021 09:49 AM

 

Published : 04 Jul 2021 09:49 AM
Last Updated : 04 Jul 2021 09:49 AM

உ.பி. தேர்தலில் புதிய கூட்டணியா?- சமாஜ்வாதி தலைவர் அகிலேஷுடன் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் சந்திப்பு

புதுடெல்லி

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் சிங் யாதவுடன் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சஞ்சய் சிங் சந்தித்துப் பேசினார். இதனால், உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் புதிய கூட்டணி அமையும் எனப் பேச்சு எழுந்துள்ளது.

சமீபத்தில் அயோத்தி ராமர் கோயில் மீதான நிலபேர ஊழல் புகாரில் சமாஜ்வாதியுடன் இணைந்து ஆம் ஆத்மி கட்சியும் எழுப்பியிருந்தது. இதையடுத்து நேற்று உ.பி.யின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் சிங் யாதவை ஆம் ஆத்மியின் உ.பி. பொறுப்பாளரான சஞ்சய் சிங் நேரில் சந்தித்தார்.

அடுத்த வருடம் உ.பி.யில் சட்டப்பேரவை தேர்தல் வரும் நிலையில் இந்தச் சந்திப்பு பல்வேறு ஊகங்களை எழுப்பியுள்ளது.

பாஜக ஆளும் உ.பி.யில் பாஜக மீண்டும் ஆட்சியில் அமரும் சூழல் நிலவுகிறது.

இதைத் தடுத்து நிறுத்த உ.பி.யில் மூன்று முறை ஆட்சி செய்த சமாஜ்வாதி கட்சி மும்முரம் காட்டுகிறது. வாக்குகள் சிதறாமல் இருக்க சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் முயற்சியிலும் சமாஜ்வாதி இறங்கியுள்ளது.

இச்சூழலில், உ.பி. அரசியலில் தீவிரம் காட்டி வரும் ஆம் ஆத்மி கட்சி-சமாஜ்வாதி தலைவர்களின் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. கடந்த 2014 மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பின் ஒதுங்கியிருந்த ஆம் ஆத்மி மீண்டும் உ.பி.யில் தீவிரம் காட்டுகிறது.

இதிலும் அக்கட்சிக்கு வெற்றி கிடைப்பது சிரமம் என்றாலும், கணிசமான வாக்குகளைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ஆம் ஆத்மி கட்சிக்கும் கணிசமான தொகுதிகளை ஒதுக்கி சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி வலுவான கூட்டணி அமைக்கும் வாய்ப்புகள் உருவாகி உள்ளன.

இதற்கு முன் பல வருடங்களாக எதிர்த்து வந்த காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜுடனும் சமாஜ்வாதி கூட்டணி அமைத்திருந்தது. 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் அகிலேஷ் சிங் கைகோத்திருந்தார்.

இதில், மொத்தம் உள்ள 403இல் பாஜக 312 பெற்று தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைத்தது. மற்றவற்றில் சமாஜ்வாதி 47, பகுஜன் சமாஜ் 19 மற்றும் காங்கிரஸ் 7 பெற்றன.

இதையடுத்து காங்கிரஸைக் கழட்டிவிட்ட அகிலேஷ், 2019 மக்களவைத் தேர்தலில் மாயாவதியின் பகுஜன் சமாஜுடன் கூட்டணி அமைத்தார். இக்கூட்டணி பெற்ற சில தொகுதிகளில் சமாஜ்வாதியை விட பகுஜன் சமாஜுக்கு அதிகம் கிடைத்தன.

இதனால், இனி எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை என அகிலேஷ் சிங் முடிவு செய்தார். எனினும், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் சிறிய கட்சிகளை மட்டும் தம்முடன் சேர்த்து வருகிறார்.

இந்தப் பட்டியலில் ஆம் ஆத்மியும் இணைந்தால் சமாஜ்வாதி தலைமையிலான கூட்டணி வலுவடையும் வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும், மாயாவதி மற்றும் இதர சிறிய கட்சிகள் தனித்துப் போட்டியால் வாக்குகள் பிரியும் சூழல் தொடர்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x