Published : 03 Jul 2021 02:32 PM
Last Updated : 03 Jul 2021 02:32 PM

ரூ.8.67லட்சம் மின்கட்டண பாக்கி வைத்துக் கொண்டு மின்வெட்டு குறித்து விமர்சிக்கும் சித்து: வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

சண்டிகர்

பஞ்சாபில் மின்வெட்டு பிரச்னையில் சொந்த கட்சியைச் சேர்ந்த மாநில முதல்வரை கடுமையாக விமர்சித்து வந்த முன்னாள் கிரிக்கெட் வீரரும் முன்னாள் அமைச்சருமான நவ்ஜோத் சிங் 8.67லட்ச ரூபாய் மின்கட்டண பாக்கி வைத்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில் அம்மாநில காங்கிரஸில் உட்கட்சிப் பூசல் வலுத்துள்ளது. பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்குக்கு எதிராக முன்னாள் கிரிக்கெட் வீரரும் முன்னாள் அமைச்சருமான நவ்ஜோத் சிங் போர்க்கொடி துாக்கியுள்ளார். சித்துவுக்கு ஆதரவாக சில காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்கள் சிலர் செயல்பட்டு வருகின்றனர்.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பஞ்சாப் காங்கிரஸில் நிலவும் உள்கட்சி மோதலைத் தீர்ப்பதற்காக மூன்று பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இக்குழு, மாநிலத்தில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமரீந்தர் சிங், சித்து ஆகியோரை சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து அந்த அறிக்கையை சமர்ப்பித்தது.

அந்தக் குழுவிடம் பல்வேறு புகார்களை தெரிவித்து இருந்தநிலையில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை நேரில் சந்தித்து முறையிட்டார். இதனிடையே பஞ்சாபில் கடந்த சில மாதங்களாக மின்வெட்டு பிரச்சினை உள்ள நிலையில் இதனை சித்து விமர்சித்து வருகிறார். மின்வெட்டு பிரச்னையில் சொந்த கட்சியின் அரசையே விமர்சித்து வருகிறார்.

முதல்வர் அமரீந்தர் சிங் சரியாக செயல்பட வேண்டும் எனவும், அலுவலக நேரங்களை முறைப்படுத்துவது, வீட்டில் இருப்போர் ஏசி பயன்பாட்டினை குறைக்க வேண்டும் என்று ஆலோசனை கூறுவதை நிறுத்த வேண்டும் என சித்து அடுத்தடுத்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

இந்நிலையில் சித்து கடந்த 8 மாதங்களாக மின்கட்டணம் செலுத்தாமல் இருந்து வருவதும், 8.67 லட்சம் ரூபாய் கட்டண பாக்கி வைத்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.

கடந்த ஆண்டு 17 லட்ச ரூபாயை மின்கட்டண பாக்கியாக சித்து வைத்திருந்ததாகவும் பின்னர் கடந்த மார்ச்சில் 10 லட்ச ரூபாயையும் செலுத்தியிருப்பதாகவும், தற்போது மேலும் 8.67 லட்சம் அளவுக்கு சித்து மின்கட்டண பாக்கி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

சித்துவின் மின்கட்டண நிலுவைத் தொகையை காட்டும் பில்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளன. பலர் சித்துவை சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x