Published : 03 Jul 2021 12:36 PM
Last Updated : 03 Jul 2021 12:36 PM

உத்தரகாண்ட் மாநில புதிய முதல்வர் யார்?- எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இன்று தேர்வு

கோப்புப் படம்

டேராடூன்

உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக இன்று பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. சத்யபால் மகாராஜ் அல்லது தன் சிங் ராவத் தேர்வு செய்ப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரகாண்ட் மாநில பாஜக முதல்வர் திரேந்திர சிங் ராவத் கடந்த மார்ச் மாதம் மாற்றப்பட்டு புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் தேர்வு செய்யப்பட்டார். தீரத் சிங் ராவத் தற்போது பவுரி மக்களவைத் தொகுதி எம்.பி.யாக உள்ளார்.

முதல்வராக பதவியேற்றுள்ள நிலையில் அவர் 6 மாதங் களுக்குள் எம்எல்ஏவாகத் தேர்வு செய்யப்பட வேண்டும். வரும் செப்டம்பர் மாதத்துக்குள் அவர் பதவியேற்க வேண்டும். தற்போது கங்கோத்ரி தொகுதியும், ஹால்த் வானி தொகுதியும் காலியாக உள்ளன. இவற்றில் கங்கோத்ரி தொகுதியில் தீரத் சிங் ராவத்தை நிறுத்த கட்சி முடிவு செய்திருந்தது.

ஆனால் அடுத்த ஆண்டு உத்தராகண்ட் சட்டப் பேரவைக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது. பேரவையின் பதவிக்காலம் முடிவடைய ஓராண்டு மட்டுமே இருக்கும் நிலையில் சட்டப் பேரவை இடைத்தேர்தல் நடத்தப்படுவது இல்லை என்பது விதியாகும்.

எனவே, தீரத் சிங் ராவத்தை ராஜினாமா செய்யுமாறு கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து நேற்று அவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள டேராடூன் வந்த நரேந்திர சிங் தோமர்

இதனையடுத்து புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக இன்று மாலை 3 மணியளவில் எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் சிறப்பு பார்வையாளராக பாஜக தலைமை அறிவித்துள்ளது.

இந்தக்கூட்டத்தில் சட்டப்பேரவை பாஜக புதிய தலைவா் தோ்ந்தெடுக்கப்படவுள்ளார். பின்னர் புதிய முதல்வர் பதவியேற்பாா். புதிய முதல்வராக சத்யபால் மகாராஜ் அல்லது தன் சிங் ராவத் தேர்வாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x