Last Updated : 03 Jul, 2021 10:39 AM

2  

Published : 03 Jul 2021 10:39 AM
Last Updated : 03 Jul 2021 10:39 AM

2 டோஸ் தடுப்பூசி; கரோனா உயிரிழப்பிலிருந்து 98 சதவீதம் பாதுகாப்பு: நிதிஆயோக் உறுப்பினர் உறுதி

நிதிஆயோக் உறுப்பினர் வி.கே.பால் | ஏஎன்ஐ

புதுடெல்லி


தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்திக்கொண்டால் கரோனா பாதிப்பின் மூலம் ஏற்படும் உயிரிழப்பிலிருந்து 98 சதவீதம் நம்மை தற்காத்துக்கொள்ள முடியும் என்று நிதிஆயோக்கின் சுகாதார உறுப்பினர் வி.கே.பால் நம்பிக்கைத் தெரிவித்தார்.

நிதிஆயோக்கின் சுகாதார உறுப்பினர் வி.கே.பால் நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பஞ்சாப் அரசுடன் இணைந்து, முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனம் கரோனா தடுப்பூசி குறித்து ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வில் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்திக்கொண்டவர்கள் கரோனா பாதிப்பின் மூலம் ஏற்படும் உயிரிழப்பிலிருந்து 98 சதவீதம் தப்பிக்க முடியும் எனத் தெரியவந்துள்ளது.

மிகவும் எளிமையான இந்த ஆய்வில் 4,868 போலீஸார் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை. இந்த போலீஸாரில் 15 பேர் கரோனா பாதிப்பில் உயிரிழந்தனர். அதாவது, ஆயிரத்துக்கு 3.08 பேர் உயிரிழந்தனர். ஆனால், 35,856 போலீஸார் குறைந்தபட்சம் ஒரு தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்

இவர்களில் 9 பேர் மட்டுமே உயிரிழந்தனர். அதாவது ஆயிரத்துக்கு 0.25 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். 42,720 போலீஸார் இரு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டதில் 2 பேர் மட்டுமே கரோனாவில் உயிரிழந்துள்ளனர். இதில் ஆயிரத்துக்கு 0.05 பேர் மட்டுமே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் மூலம் தடுப்பூசியின் ஒரு டோஸ் செலுத்திக் கொண்டவர்களுக்கு கரோனா பாதிப்பின் மூலம் ஏற்படும் உயிரிழப்பிலிருந்து 92 சதவீதம் பாதுகாப்பு கிடைக்கிறது, 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டால் 98சதவீதம் பாதுகாப்பு கிடைக்கிறது.

வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனை சார்பில் சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தி ஆய்வு நடத்தப்பட்டது. அதிலும், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் கரோனாவில் உயிரிழப்பு ஏற்படுவதும் 98 சதவீதம் தடுக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்தி்க் கொண்டு கரோனாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு லேசான காய்ச்சல் மட்டுமே வந்துள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொண்டதால், தீவிரமான உடல்நலப் பாதிப்பிலிருந்தும், உயிரிழப்பிலிருந்தும் தப்பிக்க முடியும். இதுதான் நம்முடைய தடுப்பூசி மீது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. மற்ற தடுப்பூசிகளைப் பற்றி நாம் எப்போதும் பேசுகிறோம்.

ஆனால், இதுபோன் ஆய்வுகள்தான் நிதர்சன வாழ்க்கையில் நமது தடுப்பூசி எவ்வாறு சிறந்தது, கரோனா உயிரிழப்புக்கு எதிராக எவ்வாறு செயல்படுகிறது என்பதை தெளிவுபடுத்துகிறது.

மூன்றாவது அலை வருவதும், வராமல் போவதும் நமது கையில் இல்லை. ஆனாலும், அதை எதிர்கொள்ள கிராமப்புறங்களில் தேவையான கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

குழந்தைகளுக்கான படுக்கைகள், ஐசியு வசதிகள், மருந்துகளை தயாராக வைக்க வேண்டும். மத்திய அரசி்ன் முயற்சி என்பது, 3-வது அலை வரவிடாமல் தடுப்பதாகும். மக்கள் அனைவரும் கரோனா தடுப்பு விதிகளை முறையாகக் கடைபிடித்தால் நிச்சயம் 3-வது அலை வராது

இவ்வாறு வி.கே.பால் தெரிவி்த்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x